/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பகல், இரவு வெப்பநிலை மேலும் உயரும்'
/
'பகல், இரவு வெப்பநிலை மேலும் உயரும்'
ADDED : மார் 29, 2024 12:42 AM
கோவை;'கோவையில் வரும் ஐந்து நாட்கள், பகல் நேர வெப்பநிலை, 36-38 டிகிரி செல்சியஸ் ஆகவும், இரவு நேரம் 25-26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்' என, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
மார்ச் மாத ஆரம்பத்தில், 34 டிகிரி செல்சியஸ் ஆக துவங்கிய பகல் நேர வெப்பநிலை, கடந்த வாரம், 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது. வரும் ஐந்து நாட்களில், 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. காலை நேர காற்றின் ஈரப்பதம், 80 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 20 சதவீதமாகவும் இருக்கும். சராசரியாக காற்று மணிக்கு, 8-12 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.
நிலவும் வறண்ட வானிலை கருத்தில் கொண்டு, ஏப்., முதல் வாரத்தில் இறவை கம்பு விதைப்பிற்காக நிலம் தயார் செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்னையை பொறுத்தவரையில் கோடையில் பெறப்படும் மழையை வேர் பகுதியில் சேமிக்கும் வகையில், மரத்தினை சுற்றிலும் பாத்திகளை உள்நோக்கி சாய்வாக ஆழப்படுத்தவேண்டும்.
உயர்ந்துவரும் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் குறைதல் காரணமாக, கால்நடைகளுக்கு வெப்ப அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளதால் கால்நடை மற்றும் கோழிகளுக்கு, போதியளவு சுத்தமான குடிநீர் அளிக்க வேண்டும். வெயில் நேரத்தில் மேய்ச்சலுக்கு விடவேண்டாம் என, வேளாண் பல்கலை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

