/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பைக் திரும்ப பறித்த டீலர்இழப்பீடு வழங்க உத்தரவு
/
பைக் திரும்ப பறித்த டீலர்இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : மே 31, 2024 02:17 AM
கோவை;கடனுக்கு விற்பனை செய்த பைக்கிற்கு, வங்கி அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று திரும்ப பறித்து சென்றதால், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
கோவை, சுந்தராபுரம், மாச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்த சரவண பெருமாள், காந்தி நகரிலுள்ள 'அபி பைக்ஸ்' என்ற டீலரிடம் மின்சார பைக் வாங்க சென்றார். பைக்கின் விலை 73 ஆயிரம் ரூபாய் என்றும், முன் தொகை, 20 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் பாக்கி தொகைக்கு, கோடக் வங்கி வாயிலாக கடன் ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.
சரவண பெருமாள் பயன்படுத்திய பழைய பைக்கை, 9,000 ரூபாய்க்கு எக்சேஞ்சில் எடுத்து கொண்டனர். மீதி, 11 ஆயிரம் ரூபாய் செலுத்திய பின், மின்சார பைக்கை 2023, மார்ச், 24ல் டெலிவரி கொடுத்தனர்.
இந்நிலையில், மேம்படுத்துதல் வேலை பாக்கி இருப்பதாக மீண்டும் பைக்கை எடுத்து சென்றவர்கள், திரும்ப ஒப்படைக்கவில்லை. பைக்கை கேட்டபோது, வங்கியில் வாகன கடன் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பதில் அளித்தனர். அட்வான்ஸ் தொகை மற்றும் எக்சேஞ்சில் எடுத்த பழைய பைக்கையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றினர்.
பாதிக்கப்பட்ட சரவணபெருமாள், இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர்கள் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரரிடம் பெற்ற முன் தொகை, 11 ஆயிரம் ரூபாய் வழங்குவதோடு, பழைய வாகனத்தை நல்ல நிலையில் திருப்பி ஒப்படைக்க வேண்டும். மன உளச்சலுக்கு இழப்பீடாக, 20 ஆயிரம் ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.