/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலெக்டர் நிர்ணயித்த கூலி வழங்க கோரிக்கை
/
கலெக்டர் நிர்ணயித்த கூலி வழங்க கோரிக்கை
ADDED : செப் 11, 2024 10:53 PM
கோவை : கோவை மாநகராட்சியில் பணிபுரியும் பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் வாகனங்களின் ஒப்பந்த டிரைவர்கள், கலெக்டர் நிர்ணயித்த தினக்கூலி வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்களை இயக்க, ஒப்பந்த டிரைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதில், குப்பை வண்டி இயக்கும் டிரைவர்களுக்கும், பாதாள சாக்கடை வண்டி இயக்கும் டிரைவர்களுக்கும் வழங்கும், மாத சம்பளத்தில் வேறுபாடு இருக்கிறது.
குப்பை வண்டி ஓட்டுவோருக்கு, மாத சம்பளமாக ரூ.23,827 வழங்கப்படுகிறது; பாதாள சாக்கடை வண்டி ஓட்டுபவர்களுக்கு, ரூ.13,200 மட்டுமே கொடுக்கப்படுகிறது.
இந்த ஊதிய முரண்பாட்டை களைந்து, கலெக்டர் நிர்ணயித்த குறைந்தபட்ச கூலியான, நாளொன்றுக்கு ரூ.915 வீதம் கணக்கிட்டு வழங்க வேண்டும் என, பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் வாகன ஒப்பந்த டிரைவர்கள், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம், மனு கொடுத்துள்ளனர்.
அதில், 'சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா தொற்று பரவிய காலங்களில், உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றிய துாய்மை பணியாளர்களுக்கு அறிவித்த, சிறப்பு ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த டிரைவர்களாக பணிபுரிவோரை, நிரந்தரம் செய்ய வேண்டும்' என, கூறியுள்ளனர்.

