/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு அறிவித்தும் கொப்பரை கொள்முதல் துவங்கவில்லை
/
அரசு அறிவித்தும் கொப்பரை கொள்முதல் துவங்கவில்லை
UPDATED : மார் 22, 2024 12:49 PM
ADDED : மார் 22, 2024 12:49 AM
அன்னூர்;அரசு அறிவித்து ஐந்து நாட்களாகியும், கொப்பரை கொள்முதல் துவங்காததால் தென்னை விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
இந்த சீசனுக்கான தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அரசு அறிவித்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை கொள்முதல் துவங்கவில்லை.இது குறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது :
விளைபொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை கிடைப்பதில்லை. தொழிலாளர்கள் கூலி அதிகரித்துவிட்டது. போதுமான தொழிலாளர்களும் கிடைப்பதில்லை. இதையடுத்து தென்னந் தோப்புகளை அமைத்தோம்.
தற்போது தேங்காய், இளநீர், கொப்பரை வெளிச்சந்தை விலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. அரசு அளிக்கும் குறைந்தபட்ச ஆதார விலை தான் ஓரளவு வருமானம் தந்து வருகிறது.
இந்நிலையில் ஐந்து நாட்களுக்கு முன் அரசு பிறப்பித்த உத்தரவில், 'பந்து கொப்பரைக்கு 120 ரூபாயும், அரவை கொப்பரைக்கு 111 ரூபாய் 60 பைசாவும் என  அரசு குறைந்தபட்ச விலையை உயர்த்தி அறிவித்தது. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படும். என அறிவித்தது.
அரசு அறிவிப்பை அடுத்து கடந்த ஐந்து நாட்களாக அன்னூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விசாரித்து வருகிறோம். சென்னையில் இருந்து உத்தரவு வரவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அரசு அறிவித்தும் ஐந்து நாட்களாகியும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு உரிய உத்தரவு மற்றும் வழிகாட்டுதல் அனுப்பாதது வேதனை அளிக்கிறது.
ஏராளமான விவசாயிகள் தேங்காய் மற்றும் கொப்பரை விலை குறைவு காரணமாக தோப்புக்களையும் மாற்றி ரியல் எஸ்டேட் புரமோட்டர்களுக்கு விற்கும் நிலையில் உள்ளனர். அரசு விரைவில் கொப்பரை கொள்முதல் துவக்க வேண்டும்.
இவ்வாறு தென்னை விவசாயிகள் தெரிவித்தனர்.

