/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடி வெள்ளியில் அம்பாளை கொண்டாடிய பக்தர்கள்
/
ஆடி வெள்ளியில் அம்பாளை கொண்டாடிய பக்தர்கள்
ADDED : ஆக 03, 2024 06:37 AM
ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன் னிட்டு, அம்பாள் மற்றும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு கோலாகலமாக நடந்தது.
ஆடியை, சக்திக்கு உகந்த மாதமாக அழைக்கின்றனர். மந்திரங்கள் உச்சரிக்கவும், ஜெபம் செய்வதற்கும், ஆடிமாதம் ஏற்றது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஆடி மாதத்தில் அம்பாளுக்கு விதவிதமான உற்சவங்கள் நடத்தி, பக்தர்கள் ஆராதனை செய்கின்றனர். அதில் ஐந்து வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு வெள்ளியிலும், ஒரு வகையான அலங்காரம் செய்து வழிபடுகின்றனர்.
ஆடி மூன்றாவது வெள்ளியான நேற்று, வீடுகளில் பெண்கள் குத்துவிளக்கினை அலங்கரித்து, தீபத்தில் அம்மனை ஆவாஹனம் செய்து, லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை செய்து மனதாரப் பிரார்த்தனை செய்தனர். கோவில்களிலும் விசேஷ வழிபாடுகள் நடந்தன. குடும்ப மகிழ்ச்சிக்காக கன்யா பூஜைகளை செய்தனர்.
ஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம். ஸ்ரீலட்சுமியின் மறு அவதாரமாக, ஸ்ரீஆண்டாள் ஆடிமாதத்தில் அவதரித்தார். அதனால் சுமங்கலிகளுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு, ரவிக்கை கொடுத்து உபசரித்தனர்.
ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு, பெரிய கடைவீதி கோனியம்மன், மாகாளியம்மன், தர்மராஜா கோவில் காளியம்மன், அவிநாசி சாலை தண்டுமாரியம்மன், ரத்தினபுரி கருமாரியம்மன்,
ராம்நகர் ராஜாஜி வீதி விளையாட்டு மாரியம்மன், தயிர் இட்டேரி தண்டு மாரியம்மன், மேட்டுப்பாளையம் சாலை அம்பேத்கர் நகரிலுள்ள பட்டதரசியம்மன், குறிச்சி பேஸ் 2ல் உள்ள கம்பீரவிநாயகர் கோவிலில் உள்ள காசிவிசாலாட்சி அம்மன், ராஜூ செட்டியார் வீதியிலுள்ள வனபத்ரகாளியம்மன், பெரியார் நகரிலுள்ள பண்ணாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
திரளான பக்தர்கள் வழிபட்டனர். கோனியம்மன் மற்றும் தண்டுமாரியம்மன் கோவில்களில், பக்தர்கள் கூழ் காய்ச்சி அனைவருக்கும் வழங்கினர்.