/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலக்கலில் தேர்த்திருவிழா கோலாகலம் :மாரியம்மனை வணங்கி வடம்பிடித்த பக்தர்கள்
/
சூலக்கலில் தேர்த்திருவிழா கோலாகலம் :மாரியம்மனை வணங்கி வடம்பிடித்த பக்தர்கள்
சூலக்கலில் தேர்த்திருவிழா கோலாகலம் :மாரியம்மனை வணங்கி வடம்பிடித்த பக்தர்கள்
சூலக்கலில் தேர்த்திருவிழா கோலாகலம் :மாரியம்மனை வணங்கி வடம்பிடித்த பக்தர்கள்
ADDED : மே 31, 2024 12:10 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று தேரோட்டம் துவங்கியது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க, அலங்கரிக்கப்பட்ட தேரில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வலம் வந்தார்.
பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 13ம் தேதி திருத்தேர் முகூர்த்த கால் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 14ம் தேதி வேல் புறப்பாடு, பூச்சாட்டு விழா நடந்தது.
தொடர்ந்து, 20ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கிராமசாந்தி, வாஸ்து சாந்தியும், 21ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கம்பம் நாட்டு விழா, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றன. இதையடுத்து, தினமும் பக்தர்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு செய்தனர்.
கடந்த, 22ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. 23ம் தேதி முதல், 28ம் தேதி வரை தினமும் காலை, 9:00 மணி மற்றும் இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா; இரவு, 9:00 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பக்தர்கள் ஈரத்துணியுடன் வேப்பிலை ஏந்தி, வீடு, வீடாக சென்று மடிப்பிச்சை எடுத்தும், அடி அளந்தும் வழிபாடு செய்தனர்.நேற்றுமுன்தினம் மாவிளக்கு, பொங்கல் வைத்தல்,அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இதையடுத்து, மூன்று நாள் தேரோட்டம் நேற்று துவங்கியது. காலை, 5:00 மணிக்கு மாரியம்மன், விநாயகர் திருத்தேருக்கு புறப்படுதல், மாலை, 5:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு, 36 அடி உயரம் உள்ள தேரில் அம்மன் சிவப்பு பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்திலும், 15 அடி உயரம் உள்ள தேரில், விநாயகப்பெருமான் சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.
விநாயகர் தேர் முதலில் வடம் பிடிக்க, அம்மன் தேர் மாலை, 4:53 மணிக்கு வடம் பிடிக்கப்பட்டது. தேரின் மீது வாழைப்பழங்களை வீசி அம்மனை வணங்கினர். தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில், தேர் பவனி நடந்தது. புரவிபாளையம் ஜமீன் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பண்ண மன்றாடியார் மற்றும் ஜமீன் குடும்பத்தினர், முக்கிய பிரமுகர்கள், செயல் அலுவலர் கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மதுரைவீரன் கோவில் வீதியில் நிலை நிறுத்தப்பட்டது. இன்று இரண்டாம் நாளான தேரோட்டத்தில், கோவில் பின்பக்கம் நிலை நிறுத்தப்படும். மூன்றாம் நாளான நாளை மாலை தேரோட்டம் துவங்கி, கோவிலை அடைந்து நிலை நிறுத்தப்படும். வரும், 2ம் தேதி மதியம், 12:00 மணிக்கு மஹா அபிேஷக பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.