ADDED : மே 23, 2024 04:38 AM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் டெக்ஸ்மோ கோப்பைக்கான, மாநில அளவிலான வாலிபால் போட்டிகள், நேற்று துவங்கின.
துடியலூரில் உள்ள அக்வா குரூப் நிறுவனத்தின் சார்பில், ராமசாமி நினைவு டெக்ஸ்மோ கோப்பை, 53வது ஆண்டு மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் மற்றும் அக்வா டெக்ஸ் கோப்பை, 23ம் ஆண்டு மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி கள் இம்மாதம், 26ம் தேதி வரை நடக்கிறது.
பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் உள்ள, வெங்கடகிருஷ்ணன் உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் இந்தியன் வங்கி, ஐ.ஓ.பி., தமிழக காவல்துறை, அக்வா பம்ப் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் சுங்கத்துறை அணிகள் பங்கேற்கின்றன.
மாநில அளவிலான போட்டிகள், 'லீக்' முறையில் மாலை, 5:00 மணிக்கு துவங்கி, தினமும் இரண்டு போட்டிகள் நடக்கின்றன.
அக்வா டெக்ஸ் கோப்பை மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகளில், கோவை மாவட்டத்தை சேர்ந்த, 32 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில், 'நாக் அவுட்' முறை பின்பற்றப்படுகிறது.
நேற்று நடந்த முதல் நாள் போட்டியின் முதல் ஆட்டத்தில், தமிழ்நாடு போலீஸ், ஐ.ஓ.பி., அணியும், இரண்டாவது ஆட்டத்தில், இந்தியன் வங்கி, கஸ்டம்ஸ் அணிகள் மோதின.
வெற்றி பெறும் அணிகளுக்கு, ரொக்க பரிசுகள் வழங்கப்படுகின்றன.
வரும், 26ம் தேதி வரை, தினமும் மின்னொளியில் போட்டிகள் நடக்கின்றன. அனுமதி இலவசம்.
