/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதான குழாயில் மாயமாகும் குடிநீர்! கடைக்கோடி கிராமங்களில் கண்ணீர்
/
பிரதான குழாயில் மாயமாகும் குடிநீர்! கடைக்கோடி கிராமங்களில் கண்ணீர்
பிரதான குழாயில் மாயமாகும் குடிநீர்! கடைக்கோடி கிராமங்களில் கண்ணீர்
பிரதான குழாயில் மாயமாகும் குடிநீர்! கடைக்கோடி கிராமங்களில் கண்ணீர்
ADDED : ஆக 29, 2024 12:00 AM
உடுமலை : திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தில், பல்வேறு காரணங்களால், கடைக்கோடி கிராமங்களுக்கு, வினியோகம் சீராகவில்லை; குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் பாதித்து வருகின்றனர்.
குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளைச்சேர்ந்த, 123 ஊரக குடியிருப்புகள் மற்றும் உடுமலை ஒன்றியம், 3 ஊராட்சிகளைச்சேர்ந்த, 35 ஊரக குடியிருப்புகளுக்காக திருமூர்த்தி அணையிலிருந்து புதிய கூட்டுக்குடிநீர் திட்டம், 2017ல், செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
நீண்ட காலமாக, குடிநீருக்காக போராடி வந்த, குடிமங்கலம் ஒன்றிய மக்கள், புதிய திட்டத்தால், திருமூர்த்தி தண்ணீர், தட்டுப்பாடு இல்லாமல், கிடைக்கும் என எதிர்பார்த்தனர்.
ஆனால், திட்டம் செயல்பாட்டுக்கு வந்து, பல ஆண்டுகளாகியும், கடைக்கோடி கிராமங்களில், சீரான வினியோகம் கானல் நீராகவே உள்ளது.
புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தில், புவியீர்ப்பு விசை அடிப்படையில், 103 ஊரக குடியிருப்புகளும், உந்து விசை அடிப்படையில், 55 குடியிருப்புகளுக்கும் குடிநீர் வினியோகிக்க திட்டம் வடிவமைக்கப்பட்டது.
இதில், பிரதான குழாயிலிருந்து, நீர் உந்து நிலையங்களுக்கு புவியீர்ப்பு விசை அடிப்படையில், தண்ணீர் செல்கிறது. அங்கு கொள்ளளவு குறைபாடு உட்பட பிரச்னைகளால், தண்ணீர் செல்ல வழியில்லாமல், அழுத்தம் அதிகரித்து, பிரதான குழாய் உடைவது தொடர்கதையாக இருந்தது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும், முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.
திட்டத்தின் கடைக்கோடி கிராமங்களான அடிவள்ளி, வீதம்பட்டி, வாகத்தொழுவு உட்பட பகுதிகளில், அடிக்கடி வினியோகம் பாதிக்கிறது. நீர் உந்து நிலையத்திலிருந்து பிரதான குழாய் செல்கிறது.
நீர் உந்து நிலையத்துக்கும், கடைக்கோடி கிராமத்துக்கும் இடைப்பட்ட பகுதியில், பிரதான குழாயில், குடிநீர் 'மாயமாகி' விடுவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இப்பிரச்னை பல ஆண்டுகளாக நிலவுகிறது.
குடிநீருக்காக கண்ணீர் வடிக்கும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். குடிமங்கலம் ஒன்றியத்தில், அனைத்து கிராமங்களுக்கும் முழுமையான குடிநீர் கிடைக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பல கிராமங்களில், போராட்டம் தொடர்கதையாகி விடும்.