/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நந்தி, விஷ்ணு கற்சிற்பங்கள் கல்வெட்டு கண்டெடுப்பு
/
நந்தி, விஷ்ணு கற்சிற்பங்கள் கல்வெட்டு கண்டெடுப்பு
நந்தி, விஷ்ணு கற்சிற்பங்கள் கல்வெட்டு கண்டெடுப்பு
நந்தி, விஷ்ணு கற்சிற்பங்கள் கல்வெட்டு கண்டெடுப்பு
ADDED : மே 08, 2024 07:55 AM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பூதலுார் அருகே சித்திரக்குடியை சேர்ந்த முனைவர் சத்தியா வயலில், நந்தி ஒன்று பாதி புதைந்த நிலையில் இருப்பதாக அளித்த தகவலின் அடிப்படையில், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகத்தின் தமிழ் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன், பொந்தியாகுளம் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தில்லைகோவிந்தராஜன், ஆசிரியர் ஜெயலட்சுமி ஆய்வு செய்தனர்.
இது குறித்து மணிமாறன் கூறியதாவது:
வயல்வெளியில் பாதி உடல் பூமிக்குள் மறைந்த நிலையில் நந்தி கிடைத்துள்ளது. இந்த நந்தி 9-10ம் நுாற்றாண்டின் சோழர் காலத்தை சேர்ந்தது.
நந்தியின் கழுத்தில் மணிமாலை சிறப்பாக வடிவமைக்க பட்டுள்ளது. திமில் அப்பகுதியில் உள்ள காளைக்கு உள்ளது போல காணப்படுகிறது.
ஆனந்தகாவேரி வாய்க்காலின் உட்புற தென்கரையை ஓட்டியவாறு தலை மற்றும் ஒரு கை உடைந்த நிலையில், இடுப்புக்கு கீழாக வாய்க்கால் கரையில் பாதி புதைந்த நிலையில், மூன்றடி உயரமுள்ள விஷ்ணு சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. இப்பகுதியில் பெரிய சிவன்கோவில் இருந்து முற்றிலுமாக அழிந்து போயிருக்கக்கூடும்.
பிற்காலத்தில் அந்த பகுதியில் புதியதாக கோவில் ஒன்று அமைக்கப்பட்ட நிலையில், 8ம் நூற்றாண்டை சார்ந்த பல்லவர் கால நந்தி ஒன்று உள்ளது. இந்த நந்தியின் அடிபீடத்தில் பல்லவர் கல்வெட்டு இரண்டு வரி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்லவர் கால எழுத்துப் பொறிப்புடன் இருந்து முதன்முதலாக கண்டறிய பெற்றுள்ளது சிறப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

