/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனவிலங்கு, கால்நடைகளால் இடையூறு; ஒன்றிய கவுன்சிலர்கள் புகார்
/
வனவிலங்கு, கால்நடைகளால் இடையூறு; ஒன்றிய கவுன்சிலர்கள் புகார்
வனவிலங்கு, கால்நடைகளால் இடையூறு; ஒன்றிய கவுன்சிலர்கள் புகார்
வனவிலங்கு, கால்நடைகளால் இடையூறு; ஒன்றிய கவுன்சிலர்கள் புகார்
ADDED : ஜூன் 26, 2024 09:53 PM

உடுமலை : உடுமலை ஒன்றியக்குழுகூட்டத்தில், வனவிலங்கு மற்றும் வளர்ப்பு கால்நடைகளால் இடையூறு ஏற்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
உடுமலை ஒன்றியக் குழு கூட்டம் நேற்று அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் பியூலா எப்சிபா, சுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்கவுன்சிலர்கள், பல்வேறு துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அரசுப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டுதல், பள்ளி சுற்றுச்சுவர் கட்டுதல், டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கான ஊதியம் வழங்குதல், ஊராட்சிகளில் சாலை பணிகள் உட்பட 85 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர்கள் பேசியதாவது:
தங்கமணி, (தி.முக.,): எலையமுத்துாரிலிருந்து மானுப்பட்டி செல்லும் பகுதியிலுள்ள பன்றி பண்ணையால், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. அங்குள்ள அசுத்தமான சூழலால், குழந்தைகளுக்கு தொற்றுநோய் பாதிப்பு உண்டாகிறது. சுகாதாரத்துறையினர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் விட்டிருப்பதால் மக்கள் எங்களை கேள்வி கேட்கின்றனர்.
குருவம்மா (இ.கம்யூ.,): கணக்கம்பாளையத்தில் குப்பைக்கழிவுகள் எடுத்துச்செல்வதற்கு, போதிய அளவில் சிறிய தொட்டிகள் இல்லை. குறைபாடாக உள்ளது. இதனால் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், குடிநீர் தொட்டி உட்பட பொது இடங்களை பராமரிக்கும் பணிகளும் நடப்பதில்லை. கணக்கம்பாளையத்தில் அசுத்தமான முறையில் மாட்டுபண்ணை பராமரிக்கப்படுவதால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. பண்ணையை அப்புறப்படுத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஒன்றியக் குழு துணைத்தலைவர் சண்முகவடிவேல்: வளையபாளையம் பகுதியில், குரங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளது. வீடுகளில்புகுந்து அட்டகாசம் செய்கின்றன. பலமுறை துரத்தினாலும் மீண்டும் வந்து அச்சுறுத்துகின்றன. வனத்துறையினர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலகிருஷ்ணன், (அ.தி.மு.க.,): ரோடு போடுவதற்கான செலவினம் உட்பட விபரங்களை, தீர்மானத்தில் பதிவு செய்வதற்கு அலுவலர்கள் பலமுறை அலைக்கழிக்கின்றனர். அலுவலகப்பணிகளை பார்ப்பதில் மெத்தனமாக இருக்கின்றனர். பலமுறை கூறியும் மீண்டும் தவறுதலாக தீர்மானத்தில் குறிப்பிட்டிருக்கும் அலுவலர்கள் என்ன பணி செய்கின்றனர் என்பதே தெரிவதில்லை. இப்படிதான் அனைத்து பணிகளிலும் அலட்சியம் இருக்கும். அலுவலர்கள் அலட்சியமாக இருப்பதற்கு பி.டி.ஓ., க்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.
பி.டி.ஓ., சுப்ரமணியம் கூறுகையில், ''குரங்குகளை பிடிப்பதற்கு வனத்துறை அலுவலகத்திற்கு முறையாக கடிதம் அனுப்பப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். கணக்கம்பாளையத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் துாய்மைப்பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.