/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கடை வேண்டாம்; மனு கொடுத்து வலியுறுத்தல்
/
மதுக்கடை வேண்டாம்; மனு கொடுத்து வலியுறுத்தல்
ADDED : மே 27, 2024 11:57 PM
பொள்ளாச்சி'பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியில், மதுக்கடை அமைக்க வேண்டாம்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், நேர்முக உதவியாளர் அரசகுமாரிடம், பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில், கொடுக்கப்பட்ட மனுவில், 'பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு 9வது வார்டு தனியார் டிபார்ட்மென்ட் ஸ்டோர் எதிரே உள்ள இடத்தில், டாஸ்மாக் மதுக்கடை வைக்க ஏற்பாடு நடக்கிறது.
இப்பகுதியில், அதிகளவு குடியிருப்புகள் உள்ளதாலும், போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளதாலும், மதுக்கடையால் இடையூறு ஏற்படும். எனவே, இங்கு மதுக்கடை அமைக்கக்கூடாது. அனுமதி வழங்கினால், பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்கு இடையூறு
பொள்ளாச்சி நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஐயப்பன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் முன்பாக உள்ள கார் பார்க்கிங், இருசக்கர வாகன பார்க்கிங் இடையே உள்ள குறுகலான ரோட்டில், ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இதனால், நெரிசல் ஏற்படுகிறது.
அரசு மருத்துவமனைக்கு எதிரே கோவில் வீதியில் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ள நிலையில், 200 அடி துாரத்தில் புதிய ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்து பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகின்றனர்.இதுபோன்று பழைய பஸ் ஸ்டாண்டின் நுழைவாயில், உள்புறம் ஆட்டோக்களை நிறுத்தியுள்ளனர். அங்கு இருசக்கர வாகனத்தை நிறுத்தினால், இது ஆட்டோ ஸ்டாண்ட் என கூறுகின்றனர். பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ ஸ்டாண்ட் அனுமதி அளித்துள்ளதாக கூறுகின்றனர்.
எனவே, பொள்ளாச்சி நகரில், பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதியில்லாமல் அமைந்துள்ள ஆட்டோ ஸ்டாண்ட்களை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.