/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெஞ்சு பொறுக்குதில்லையே! பாரதியார் பல்கலைக்கழகத்தில்வரிசைக்கட்டுகின்றன புகார்கள்லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
/
நெஞ்சு பொறுக்குதில்லையே! பாரதியார் பல்கலைக்கழகத்தில்வரிசைக்கட்டுகின்றன புகார்கள்லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
நெஞ்சு பொறுக்குதில்லையே! பாரதியார் பல்கலைக்கழகத்தில்வரிசைக்கட்டுகின்றன புகார்கள்லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
நெஞ்சு பொறுக்குதில்லையே! பாரதியார் பல்கலைக்கழகத்தில்வரிசைக்கட்டுகின்றன புகார்கள்லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
ADDED : ஆக 12, 2024 12:49 AM
கோவை;கோவை பாரதியார் பல்கலையில், சமீபகாலமாக அரங்கேறி வரும் முறைகேடுகள் அதன் தரத்தை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளன. ஊழல் முறைகேடு, கொள்முதல் முறைகேடு புகார்கள் சார்ந்த, முக்கிய கோப்புகள் வைக்கப்பட்ட சாவி ஒளித்துவைக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை புகுந்து, சாவியை கைப்பற்றியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் மீது, நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த கல்வியாளர்கள் துணைவேந்தர்களாக இருந்து, பாரதியார் பல்கலையை திறம்பட நிர்வகித்ததெல்லாம் பழைய கதை. 2022 அக்டோபர் முதல், துணைவேந்தரே இல்லாமல் தள்ளாடுகிறது பாரதியார் பல்கலை. அரசும் கண்டுகொள்ளாமலே உள்ளது.
பல்வேறு புகார்களுக்கு உள்ளாகியுள்ள, இப்பல்கலையின் துணைவேந்தர் பொறுப்பு குழு அதிகாரி ஒருவர், சகல அதிகாரங்களையும் கையில் எடுத்துக்கொண்டிருப்பதால், நிர்வாகம் தள்ளாடுவதாக, பேராசிரியர்களும், மாணவ, மாணவியரும் புலம்பித்தீர்க்கின்றனர்.
ஊழல் முறைகேடு, கொள்முதல் முறைகேடு புகார்கள் அடங்கிய, முக்கிய கோப்புகள் வைக்கப்பட்ட 'டார்க் ரூம்' சாவியை, தன்வசம் இந்த அதிகாரி வைத்துக்கொண்டிருப்பதாக, சமீபத்தில் பெரும் சர்ச்சை கிளம்பியது.
இந்நிலையில், மூன்று பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழு, சில நாட்களுக்கு முன், பல்கலைக்கு சென்று 'டார்க் ரூம்' சாவி குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரு நாள் முழுவதும் போராடியும், சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி சாவியை தர மறுத்துள்ளார்.
தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மிரட்டியபின், சாவி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சாவியை, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்து சென்றுள்ளனர்.
மீண்டும் விசாரணை
2018ம் ஆண்டு நடைபெற்ற பணிநியமன ஊழல் புகாரை மீண்டும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தினந்தோறும் ஒரு அதிகாரி, பல்கலையில் கோப்புகளை ஆய்வு செய்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
காலியிடங்கள், முறைகேடு புகார்கள் தொடர்கதையாகியுள்ள சூழலில், துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர்களுக்கு மத்தியிலும், பிற முக்கிய பொறுப்பு வகிப்பும் அதிகாரிகளுக்கு மத்தியிலும், நேரடி மோதல் போக்கு எழுந்துள்ளது. இதனால், பேராசிரியர்களின் பணிச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிர்வாக பணிகள் ஸ்தம்பித்துள்ளன.
குறிப்பாக, துணைவேந்தர் பொறுப்பு குழுவில் உள்ள அந்த அதிகாரி மீது, பல புகார்கள் உறுதிசெய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்க, உயர்க்கல்வித்துறை செயலர் தயக்கம் காண்பிப்பது, பல்வேறு யூகங்களுக்கு வழிவகுக்கிறது.
கல்லுாரி மேம்பாட்டு கவுன்சில்
பாரதியார் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள, 133 கல்லுாரிகளில் புதிய துறை துவங்குதல், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும், கல்லுாரி மேம்பாட்டு கவுன்சில் கவனிக்கிறது. இதற்கு, இயக்குனர் நியமனத்தில் சீனியாரிட்டியில் 32வது இடத்தில் இருந்த நபரை நியமித்து முறைகேடு நடந்துள்ளது. தவிர, ஒவ்வொரு முறை கல்லுாரிகளில் 'இன்ஸ்பெக் ஷன் குழு' அமைக்கும் போதும், குறிப்பிட்ட சில நபர்களை அனுப்புவதாகவும், கல்லுாரி நிர்வாகத்தினரிடம் பணம் வசூல் செய்வதாகவும், புகார் எழுந்துள்ளது.
தன்னிச்சையான முடிவுகள்
பல்கலையின் பல்வேறு முக்கிய முடிவுகளை, துணைவேந்தர் பொறுப்பு குழுவில் உள்ள ஒரு நபர் மட்டுமே, தன்னிச்சையாக எடுப்பதாக புகார் எழுந்துள்ளது. 58 கவுரவ விரிவுரையாளர்கள் பணிநியமனத்தில், துணைவேந்தர் பொறுப்பு குழுவில் உள்ள பல்கலையை சேர்ந்த ஒரு பெண் அதிகாரி மீது, விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த விசாரணை குழு அமைப்பதிலும், கோப்புகளை கையாள்வதிலும் சம்மந்தப்பட்ட அதிகாரியின் தலையீடு அதிகம் உள்ளது. இருப்பினும், பொறுப்பில் தொடர உயர்கல்வித்துறை செயலர் அனுமதித்து இருப்பது, விவாதத்தை கிளப்பியுள்ளது.
குறிப்பாக, அனைத்து முக்கிய குழுக்களிலும் தன்னைத்தானே பொறுப்பாளராக நியமித்துக்கொள்வதால், பல புகார்களின் விசாரணை கண்துடைப்பாக மாறியுள்ளது.
நிரப்பப்படாத காலியிடங்கள்
பாரதியார் பல்கலையில், 2022ம் அக்., மாதம் முதல் துணைவேந்தர் பணியிடம் காலியாகவுள்ளது. தவிர, பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, கல்லுாரி மேம்பாட்டு கவுன்சில் டீன், துணை பதிவாளர், தொலைதுார கல்வி மைய இயக்குனர், நிதி அலுவலர், பல்கலை பொறியாளர், உதவி பொறியாளர், மக்கள் தொடர்பு அதிகாரி உட்பட, 330 பணியிடங்கள் ஆண்டுக்கணக்கில் காலியாகவுள்ளன.
தற்போது, உயர்கல்வித்துறை செயலர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு, துணைவேந்தர் செயல்பாடுகளை கவனித்து வருகிறது. பல்கலையில் பல்வேறு புகார்கள், சர்ச்சைகள், முறைகேடுகள் தொடர்வதால், உரிய நடவடிக்கை எடுக்க பேராசிரியர்கள், பூட்டா உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
சிண்டிகேட் குழுவில் காலியிடங்கள்
பல்கலையின் முக்கிய அதிகாரம் கொண்ட சிண்டிகேட் குழுவில், பல்கலை தரப்பில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், இரண்டு பேராசிரியர் உட்பட நான்கு இடங்களும் காலியாக விடப்பட்டுள்ளன. அதே சமயம் ஒரு சில நபர்கள், 10 ஆண்டுகளுக்கும் மேல் சிண்டிகேட் பதவியை வைத்திருப்பதும், கேள்வியை எழுப்பியுள்ளது.
இதுபோன்று எழும் புகார்களுக்கு, பல்வேறு கட்ட விசாரணை கமிட்டி அமைத்து, ஆண்டுக்கணக்கில் பிரச்னைகளை இழுத்து, குற்றம் செய்பவர்களை காப்பாற்றும் வேலை மட்டுமே நடைபெற்று வருகிறது. புகார்கள் குறித்து கேட்க, போனில் தொடர்பு கொண்டபோது, அந்த பெண் அதிகாரி பதிலளிக்கவில்லை.
பதிவாளர் (பொறுப்பு) ரூபா குணசீலனிடம் கேட்டதற்கு, ''லஞ்ச ஒழிப்புத்துறை சார்ந்த விசாரணை நடப்பதால், அது குறித்து தற்போது தகவல்கள் எதுவும் அளிக்க இயலாது,'' என்றார்.
பெண் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட, பாரதியின் பெயரில் அமைந்துள்ள பல்கலையின் நற்பெயர், ஒரு பெண் அதிகாரியாலேயே பாழ்படுவதை காணும்போது, நெஞ்சு பொறுக்குதில்லையே!