/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதியவர்கள் தடுமாறி விழுவதை தடுக்க டாக்டர் டிப்ஸ்
/
முதியவர்கள் தடுமாறி விழுவதை தடுக்க டாக்டர் டிப்ஸ்
ADDED : செப் 15, 2024 01:44 AM

முதுமைக் காலங்களில் பெரும்பாலானோர் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தும், எலும்பு முறிவு ஏற்பட்டும் அவதி அடைந்து வருகின்றனர். அதற்கான காரணம் மற்றும் தடுப்பதற்கு சில ஆலோசனைகளை வழங்கினார் பொது நல மருத்துவர் கவின்குமார். அவர் கூறியதாவது:
இந்திய முதியவர்களில் கீழே விழுந்து பாதிப்பு அடைபவர்கள், 14 சதவீதம் முதல், 53 சதவீதம் வரை உள்ளனர். வயதானவர்கள் கீழே விழுவதற்கு தசை பலவீனம், கீல்வாதம், மூட்டு விறைப்பு போன்ற மூட்டு பிரச்னைகள், கண்புரை, பார்வைக் குறைவு, காது கேளாமை, உணர்வு குறைதல் போன்ற பாத பிரச்னைகள், பக்கவாதம், சிறுநீர் அடங்காமை, சிறுநீர் கழிக்க வேண்டிய அவசரம் போன்றவை காரணமாக உள்ளது.
இதை தவிர வீட்டின் அமைப்புகளும் ஒரு காரணமாக இருந்து வருகிறது.
இதனால் முதியவர்களுக்கு எலும்பு முறிவுகள், குறிப்பாக இடுப்பு எலும்பு முறிவுகள், தலையில் காயம், போன்றவை ஏற்பட்டு மருத்துவமனை செலவுகள் அதிகரித்து பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.இதனை தடுக்க முதியவர்களுக்கு வழக்கமான உடற்பயிற்சி, தடுமாற்றத்தை தடுக்க பேலன்ஸ் டிரைனிங் அளிக்க வேண்டும்.
தேவைப்படும் முதியவர்களுக்கு காதுகேட்கும் கருவிகள், கண்ணாடிகள், கண்புரை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். கால் பராமரிப்பு, கால் சுய பரிசோதனை செய்ய வேண்டும். கால்களுக்கு பொருத்தமான அணிகலன், வாக்கர் போன்ற உதவி சாதனங்களைப் பயன்படுத்தலாம்.
அதேபோன்று வீடுகளில் தேவையற்ற பொருட்களை தவிர்க்க வேண்டும், அனைத்து பொருட்களையும் அதற்கு பொருத்தமான இடங்களில் வைக்க வேண்டும். இரவு நேரங்களில் முதிவர்கள் கழிப்பறைக்கு செல்ல துாக்கத்திற்கு இடையூறு இல்லாத லைட்டு களை பயன்படுத்த வேண்டும். கால் துடைப்பானிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இரவு நேரங்களில் உட்புறம் மற்றும் வெளியில் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இரவு நேரங்களில் முதியவர்கள் லைட் ஸ்விட்சுகள் மற்றும் பிற அவசர சுவிட்சுகளை கண்டறிய ஒளிரும் ஸ்டிக்கர்களால் அடையாளப்படுத்தி வைக்கலாம்.
ஓரிடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இவற்றை பின்பற்றினால் ஓரளவு முதியவர்கள் கீழே விழுந்து ஏற்படும் காயங்களில் இருந்து தப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.