/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெட்டிய முள் மரங்களை ஏலம் விடாமல் இழுத்தடிப்பு
/
வெட்டிய முள் மரங்களை ஏலம் விடாமல் இழுத்தடிப்பு
ADDED : ஆக 27, 2024 02:35 AM

மேட்டுப்பாளையம்;சிறுமுகை வனப் பகுதியில், வெட்டிய டில்லி முள் மரங்கள், ஐந்து மாதங்கள் ஆகியும் இன்னும் ஏலம் விடாமல் உள்ளது. இதனால் வனத்துறைக்கு, வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சிறுமுகை வனச்சரகத்தில், 11 ஆயிரத்து, 683 ஹெக்டர் நிலப்பரப்பில் வனப்பகுதிகள், அமைந்துள்ளது. வனப்பகுதிகளில் உள்ள மலைப்பகுதி அல்லாது நிலப்பகுதிகளில், அதிகளவில் டில்லி முள் மரங்கள் வளர்ந்து இருந்தன.
இந்த மரங்களால், வனவிலங்குகள் தீவன மரங்கள் மற்றும் செடிகள் வளர முடியாத நிலை ஏற்பட்டது. வனவிலங்குகளுக்கு போதிய தீவனம் கிடைக்காததால், யானைகள், இரவில் விவசாய நிலங்களுக்கு வந்து, பயிர்களை சேதம் செய்து வருகின்றன. அதனால் இந்த முள் மரங்களை வெட்ட, மாவட்ட வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து சிறுமுகை வனத்துறையினர், முள் மரங்களை வெட்டி, அட்டி, அட்டியாக அடுக்கி வைத்துள்ளனர். இந்த விறகுகள் வெட்டி அடுக்கி பல மாதங்கள் ஆனதாலும், உடனடியாக ஏலம் விடாததாலும், அடுக்கி வைத்த விறகு அட்டியை, மறைக்கும் அளவிற்கு, முள் செடிகள் வளர்ந்துள்ளன.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
முள் மரங்கள் வெட்டி அடுக்கி வைத்து, ஐந்து மாதங்கள் ஆகின்றன. ஆனால் ஏலம் விடாததால், மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வருகிறது. சரியான காலத்தில் ஏலம் விட்டால், வனத்துறைக்கு நல்ல வருவாய் கிடைக்கும். ஏலம் விடாமல் போனால், விறகின் தரம் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் வனத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே முள் மரங்களை உடனடியாக ஏலம் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் கூறுகையில் இந்த மரங்களை ஏலம் விட, மாவட்ட வனத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

