/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிரைவர்கள் பணி நிரந்தரம்; ஜூலை 8ல் பேச்சுவார்த்தை
/
டிரைவர்கள் பணி நிரந்தரம்; ஜூலை 8ல் பேச்சுவார்த்தை
ADDED : ஜூன் 15, 2024 11:31 PM
கோவை:கோவை மாநகராட்சி டிரைவர்கள், கிளீனர்கள், துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, தொழிலாளர் நலத்துறையில், ஜூலை 8ல் பேச்சு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி டிரைவர்கள், கிளீனர்கள், துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தல், அரசாணைப்படி சம வேலைக்கு சம சம்பளம், பணி மறுக்கப்பட்டோருக்கு பணி, வருங்கால வைப்பு நிதி தொடர்பான புகார்கள், தினக்கூலி பணியாளர்களை நேரடி பணியாளர்களாக பணியமர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோயமுத்துார் லேபர் யூனியன் தொழிற்சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) முன்னிலையில் பேச்சு நடந்தது. மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் தரப்பில் அதிகாரிகள் பங்கேற்கவில்லை.
அதனால், கோயமுத்துார் லேபர் யூனியன் மாநகராட்சி டிரைவர்கள், துாய்மை பணியாளர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை, கோவையில் முதல்வரிடம் ஒப்படைப்பதென, சங்கத்தின் நிர்வாக குழுவில் முடிவெடுக்கப்பட்டது. இதன்பின், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பேச்சு நடத்தினர்.
மறுநாள் நடந்த பேச்சில், மாநகராட்சி சார்பாக ஒப்பந்த நிறுவனத்தில் இருந்து கென்னி பங்கேற்றார். தொழிற்சங்கங்கள் தரப்பில் பாலகிருஷ்ணன், செல்வராஜ், குணசேகரன், ஷானவாஸ், பஞ்சலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மனுவில் குறிப்பிட்டிருந்த, தெற்கு மண்டலத்தை சேர்ந்த டிரைவர்களுக்கு, மீண்டும் வேலை வழங்க ஒப்பந்த நிறுவனம் உறுதியளித்தது.
முதல்வர் ஸ்டாலின் கோவை வருகை காரணமாக, மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அதனால், மற்ற கோரிக்கைகள் குறித்து, ஜூலை 8ல் பேச்சு நடத்த முடிவெடுக்கப்பட்டது.