/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ட்ரோன் பயன்பாடு இனி அதிகரிக்கும்: 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தார் நம்பிக்கை
/
ட்ரோன் பயன்பாடு இனி அதிகரிக்கும்: 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தார் நம்பிக்கை
ட்ரோன் பயன்பாடு இனி அதிகரிக்கும்: 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தார் நம்பிக்கை
ட்ரோன் பயன்பாடு இனி அதிகரிக்கும்: 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தார் நம்பிக்கை
ADDED : ஏப் 23, 2024 10:33 PM

கோவை : ''வருங்காலத்தில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அனைத்து துறைகளிலும் அதிகரிக்கும்,'' என, கோவையில் ட்ரோன் தொழில்நுட்பம் ஸ்டார்ட் அப் நடத்தி வரும், ஆதர்ஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ட்ரோன் தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் மாற்றாக உருவெடுத்து வருகிறது. விவசாய துறையில், பயிர்களுக்கு மருந்து தெளிப்பதில், இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
தற்போது நாட்டில், 200க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் ட்ரோன் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருவதாக, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வரும் 2030ம் ஆண்டுக்குள் ட்ரோன் தயாரிப்பில், உலகளாவிய மையமாக இந்தியா மாறுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இதுகுறித்து, கோவையில், 'ஸ்கை எக்ஸ்' ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிட்., ட்ரோன் தயாரிப்பு ஸ்டார்ட் அப் நடத்தி வரும் ஆதர்ஷ் கூறியதாவது:
திருமண விழாக்கள், நகரத்தை கழுகுப் பார்வையில் படம் பிடிப்பது போன்ற துவக்க நிலையில் இருந்த ட்ரோன் தொழில்நுட்பம், வேளாண் தொழிலில், உரம் தெளிப்பது, விதை துாவுவது, உணவு விநியோகம், பாதுகாப்பு, சுற்றுலா என பல நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயப் பயிர்களுக்கு மருந்து தெளிக்க, ட்ரோனில் பொருத்தப்பட்டிருக்கும் 10 அல்லது 15 லிட்டர் டேங்க் வாயிலாக, 5 முதல் 7 நிமிடங்களுக்குள், ஒரு ஏக்கருக்கு மருந்து தெளிக்க முடியும்.
ஒரு நிலத்தை, ட்ரோன் தொழில்நுட்பம் வாயிலாக சர்வே செய்யும் போது, அதிலிருக்கும் மேடு, பள்ளங்கள், ட்ரோனில் எடுத்த புகைப்படத்தை, கூகுள் வாயிலாக எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மீது இணைத்து, தெளிவான பார்வைக்கு வித்திடுகிறோம்.
சர்வே செய்யப்படும் நிலத்தில் மரங்கள் வைக்கப்பட்டிருக்குமானால், என்ன மரம் வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் கண்டறியலாம். அதை நாங்கள் செய்து கொடுக்கிறோம்.
இதை 3டி வடிவிலும் மாற்றிக் கொடுக்கிறோம். பகல் மற்றும் இரவுக்கு என தனித்தனியாக பயன்படுத்தும் வகையிலான ட்ரோன்கள் உள்ளன.
சோலார் பேனல்களில் இருக்கும் குறைபாடுகள், ஒரு பகுதியில் நிலவும் வெப்பநிலை போன்றவற்றையும், இந்த தொழில்நுட்பத்தில் கண்டறியலாம்.
ட்ரோன் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் மோட்டார் மட்டும் வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்டு, இங்கு முழுமையாக வடிவமைக்கிறோம்.
விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டியை போல், நாங்கள் வடிவமைக்கும் ட்ரோன்களிலும் கருப்பு பெட்டி இருப்பது, எங்கள் தயாரிப்பில் தனிச்சிறப்பு. வருங்காலத்தில் இத்தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

