/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதையில் தனியார் பஸ் இயக்கிய டிரைவர் கைது
/
போதையில் தனியார் பஸ் இயக்கிய டிரைவர் கைது
ADDED : ஆக 01, 2024 12:48 AM

கிணத்துக்கடவு : பொள்ளாச்சி --- கோவை வழித்தடத்தில், ஸ்ரீ சக்தி வேலவன் என்ற தனியார் பஸ் இயங்குகிறது. இதில், நேற்று முன்தினம் இரவு, பொள்ளாச்சியில் இருந்து50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ் கிளம்பியது.
கிணத்துக்கடவு புதுபஸ்ஸ்டாண்டில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயணியர்கள் இறங்கிய தனியார் பஸ்சை போலீசார் சோதனை செய்தனர். இதில்,பஸ்சை ஓட்டி வந்த பொள்ளாச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி,42, என்பவர் குடிபோதையில் இருந்தது உறுதியானது.
இதையடுத்து, போலீசார் பஸ் டிரைவரை கைது செய்தனர். மேலும், பஸ்சில் பயணம் செய்த,50-க்கும் மேற்பட்ட பயணியரை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு தனியார் பஸ் ஓட்டிச்செல்லப்பட்டது. இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மக்கள் கூறுகையில், 'பஸ்ஸில் பயணம் செய்யும் போது, டிரைவரை நம்பி ஏராளமான பயணியர் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், மது அருந்தி பஸ் ஓட்டும் போது விபத்து அபாயம் அதிகம் உள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பஸ் உரிமையாளர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்,' என்றனர்.