/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வறட்சியால் காய்கறி விலை உயர்ந்தது பீன்ஸ் கிலோ ரூ.150க்கு விற்பனை
/
வறட்சியால் காய்கறி விலை உயர்ந்தது பீன்ஸ் கிலோ ரூ.150க்கு விற்பனை
வறட்சியால் காய்கறி விலை உயர்ந்தது பீன்ஸ் கிலோ ரூ.150க்கு விற்பனை
வறட்சியால் காய்கறி விலை உயர்ந்தது பீன்ஸ் கிலோ ரூ.150க்கு விற்பனை
ADDED : ஏப் 23, 2024 02:29 AM

மேட்டுப்பாளையம்:வறட்சியின் காரணமாக, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகளின் வரத்து 70 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், அன்னூர் சாலையில் மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு கேரட், முட்டைகோஸ், பீன்ஸ் காய்கறிகளை உள்ளூர் விவசாயிகள் மட்டுமின்றி, நீலகிரி மற்றும் கர்நாடகா மாநில விவசாயிகளும் கொண்டு வருகின்றனர். இங்கிருந்து கேரளா மற்றும் தென் மாவட்டங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. தற்போது தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இதனால் காய்கறிகளை விவசாயம் செய்வதிலும், அறுவடை செய்வதிலும், சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மகசூல் குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகளின் வரத்து 70 சதவீதம் குறைந்துள்ளது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உள்ள தனியார் காய்கறி மண்டி உரிமையாளர் ராஜா கூறுகையில், காய்கறிகளின் வரத்து 70 சதவீதம் குறைந்துள்ளது. பீன்ஸ் ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. கேரட் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. முட்டை கோஸ் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது. சராசரியாக 1000 டன் காய்கறிகள் வரத்து வந்த நிலையில் 300 டன் தான் வருகிறது. இதனால் விலை உயர்ந்துள்ளது. மேலும் விலை உயரும். என்றார்.
இதுகுறித்து மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கி செல்லும் வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில மாதங்களாகவே காய்கறிகளின் விலை மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்கு தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றுகின்றனர். மழை பெய்தால் மட்டுமே இதற்கு தீர்வு வரும். விலை உயர்வால், மக்கள் குறைந்த அளவே காய்கறிகளை வாங்கி செல்கின்றனர், என்றனர்.

