/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சீமான் சின்னத்தை 'ஈஸி'யா பெற்ற சுயேச்சை
/
சீமான் சின்னத்தை 'ஈஸி'யா பெற்ற சுயேச்சை
ADDED : ஏப் 02, 2024 12:29 AM
திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக, பாரதிய பிரஜா ஐக்கிய கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர், தன் மனுவை வாபஸ் பெற்ற போதும், 'கரும்பு விவசாயி' சின்னம், வேறொரு சுயே., வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டது.
தமிழகத்தில் கரும்பு விவசாயி சின்னம், நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இம்முறை, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி, கரும்பு விவசாயி சின்னத்தை பெற்றது. நாம் தமிழர் கட்சிக்கு ஒலி வாங்கி (மைக்) சின்னம் வழங்கப்பட்டது.
திருப்பூர் லோக்சபா தொகுதியில், பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில், சந்திரசேகர் என்பவர், மனு தாக்கல் செய்தார். இருப்பினும், அவர் தனது மனுவை வாபஸ் பெற்றார். ''நாம் தமிழர் கட்சியினர், பவானி பகுதியில் நன்கு பணியாற்றியுள்ளனர்; அவர்களின் ஓட்டுகளை பிரிக்க எனக்கு மனமில்லை; எனவே, எனது மனுவை வாபஸ் பெறுகிறேன்'' என்றார்.
'மற்றவர் உழைப்பால் விளைந்த சின்னத்தை பயன்படுத்த விரும்பாமல் வேட்பு மனுவை வாபஸ் பெற்றவருக்கு நன்றி' என, நாம் தமிழர் கட்சியினர், அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
இதனால், கரும்பு விவசாயி சின்னம், பொது பட்டியலுக்குள் வந்தது. சுயே., வேட்பாளராக மனு தாக்கல் செய்த வேலுசாமிக்கு அந்த சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
வேலுசாமி கூறுகையில், 'கரும்பு விவசாயி, சிலிண்டர், ரோலர் என, மூன்று சின்னங்களை கேட்டிருந்தேன். முதலில், கரும்பு விவசாயி சின்னம் கேட்டிருந்ததால், அச்சின்னத்தை கலெக்டர் ஒதுக்கினார்' என்றார். கரும்பு விவசாயி சின்னம் பெற, நாம் தமிழர் கட்சியினர், சட்டப் போராட்டம் நடத்திய நிலையில், சுலபமாக சுயே., வேட்பாளர் அச்சின்னத்தை பெற்றது, அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் வியப்பு ஏற்படுத்தியது.

