/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை கோவையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
/
வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை கோவையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை கோவையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை கோவையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
ADDED : ஜூலை 06, 2024 12:10 AM
கோவை;பா.ஜ., மாநில தலைவரான பிறகு, என்ன புதிய திட்டத்தை மத்திய அரசிலிருந்து கொண்டு வந்தார்... எதுவுமே கிடையாது. வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை, என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கோவை விமான நிலையத்தில், எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க., விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலை புறக்கணித்ததற்கான காரணத்தை, ஏற்கனவே அறிவித்துள்ளோம். இருப்பினும் வேண்டும் என்றே, அ.தி.மு.க.,வை அண்ணாமலை குறை சொல்லி பேசியிருக்கிறார். அவர் மெத்தப் படித்தவர்; மிகப் பெரிய அரசியல் ஞானி; அவரது கணிப்பு அப்படி இருந்திருக்கிறது.
விக்கிரவாண்டியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்காது. இருந்தும் வேண்டுமென்றே திட்டமிட்டு, விக்கிரவாண்டி சட்டசபை தேர்தலில் அ.திமு.க., பற்றி பா.ஜ., கூறிருப்பது கண்டிக்கத்தக்கது.
அது மட்டுமல்ல, ஏதோ அண்ணாமலை வந்த பிறகுதான், பா.ஜ., வளர்ந்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கியுள்ளார். அவர், தினமும் பேட்டி கொடுத்து தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அவர் பா.ஜ., மாநில தலைவராக வந்த போது, என்ன புதிய திட்டத்தை மத்திய அரசிலிருந்து கொண்டு வந்தார்?; எதுவுமே கிடையாது. வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கிறார். மற்ற கட்சிகளை அவதூறாக பேசுவதைதான், வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, இப்படிப்பட்ட மாநில தலைவர்கள் இருப்பதால்தான், 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய, பா.ஜ., கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.
சசிகலா, 2021ல் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், 'ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும், சகோதரியாக இருந்தேனோ அவர் மறைந்த பிறகு அப்படித்தான் இருக்கின்றேன்.
நான் என்றும் பட்டத்திற்காகவோ, பதவிக்காகவோ ஆசைப்படவில்லை. அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பேன்' என அறிவித்து விட்டார். இது என்ன கார்ப்பரேட் கம்பெனியா 'ரீ என்ட்ரி வருவதற்கு; இது கட்சி.
கல்வி செல்வத்தை கொச்சைப்படுத்தியவர் ஆர்.எஸ்.பாரதி. பட்டம் பெறுவோரை கேவலப்படுத்துகிறார். பட்டம் படித்தவர்கள் தகுந்த பதிலடி கொடுப்பர்.
தொடர்ந்து தமிழகத்தில் ஆங்காங்கே, கள்ளச்சாராயம் விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கிறது. சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. கொலை, வழிப்பறி கொள்ளை, பாலியல் கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
செயல்படாத பொம்மை முதல்வர் ஆட்சியில் இருக்கிறார். ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடவடிக்கை எதுவும் இல்லை.
இவ்வாறு, எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.