/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வசதியில்லாத மாணவர்கள் படிக்க கல்விக்கடன்! முன்னோடி வங்கி அழைப்பு
/
வசதியில்லாத மாணவர்கள் படிக்க கல்விக்கடன்! முன்னோடி வங்கி அழைப்பு
வசதியில்லாத மாணவர்கள் படிக்க கல்விக்கடன்! முன்னோடி வங்கி அழைப்பு
வசதியில்லாத மாணவர்கள் படிக்க கல்விக்கடன்! முன்னோடி வங்கி அழைப்பு
ADDED : மே 23, 2024 11:13 PM
- நமது நிருபர் -
'மாணவர்களின் மேல் படிப்புக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன. இதை மாணவர்கள், முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என, மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடித்த பின், மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் நலனுக்காக, வங்கிகள் சார்பில் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
இதில், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறை குறித்து, கோவை மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) மேலாளர் ஜிதேந்திரன், முதுநிலை மேலாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கூறியதாவது:
கல்விக் கடன் விரும்பும் மாணவர்கள், www.vidyalakshmi.co.in அல்லது www.jansamarth.in ஆகிய இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முன், பதிவேற்றும் வகையில், மாணவர் மற்றும் பெற்றோரின் பான், ஆதார் கார்டு, கல்லுாரியில் கவுன்சிலிங் தேர்வு கடிதம், பெற்றோரின் வருமான சான்று, கட்டண விபரம் ஆகிய ஆவணங்களின் நகல்களை, தயாராக வைத்திருக்க வேண்டும். மொபைல் போன் எண், மின்னஞ்சல் முகவரியையும் தெரிவிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் போது, வீட்டின் அருகில் உள்ள வங்கிக் கிளைகளை தேர்வு செய்ய வேண்டும். அப்போது, வங்கியில் கணக்கு துவங்காமல் இருந்தாலும் கூட, விண்ணப்பம் செய்த பின், குறிப்பிட்ட வங்கியில், கணக்கு துவங்க வேண்டும்.
நடைமுறை முழுவதுமாக முடித்த பின், 'கல்விக்கடனுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது' என்று, உங்கள் மின்னஞ்சலுக்கு தகவல் வரும்.
'மாணவர், கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்' என்று, சம்பந்தப்பட்ட வங்கிக்கும் தகவல் சென்று விடும். விண்ணப்பம் செய்ததை, மாணவர் 'பிரிண்ட்' எடுத்துக் கொள்ளலாம்.
ரூ.4 லட்சம் வரை எவ்வித பிணையமும் இல்லாமல், மாணவர், பெற்றோர் கையெழுத்திட்டு கடன் பெற்றுக் கொள்ளலாம். ரூ.4 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை, பிணையதாரர் ஒருவர் கையெழுத்திட்ட பின், கடன் வழங்கப்படும்.
ரூ.7.50 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சொத்தின் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. இவை, முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் கடன்.
ரூ.10 லட்சத்துக்கு மேலும், சொத்தின் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில், படிக்க செல்லும் மாணவர்களுக்கும் கடன் வசதி உண்டு. பெற்றோரின் வருமானம் அடிப்படையில், தகுதியுள்ள மாணவர்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது. மாணவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கூடுதல் விபரங்களுக்கு, கோவை மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள வங்கிக் கிளையை அணுகலாம். 0422- 2300310என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.