ADDED : மார் 04, 2025 12:29 AM
மேட்டுப்பாளையம்:
காரமடை அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி பலியானார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரி, 62, கணவர் பழனிச்சாமி இறந்துவிட்டார்.
இவர் தற்போது மேட்டுப்பாளையம் விவேகானந்தபுரம் சிவன்புரம் காலனியில் வசித்து வந்தார். இவரது மகள், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பெரிய நாயக்கன்பாளையத்தில் வசித்து வருகிறார்.
இவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மாதேஸ்வரி காரமடை அருகே வேளாங்கண்ணி பஸ் நிறுத்தம் அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த அரசு பஸ் மாதேஸ்வரி மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, காரமடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.-----