ADDED : ஆக 09, 2024 10:29 PM
கோவை;கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், 'எலக்ட்ரோடெக் 2024' கண்காட்சி நேற்று துவங்கியது. கொடிசியா தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மொரிஷியஸ் தீவு நிதியமைச்சர் சுமில்தத் போலா பேசுகையில், ''மொரிஷியஸ் தீவு இந்தியாவுடன் நல்லுறவு கொண்டுள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், கல்வியில் இருதரப்பும் பல்வேறு பரிமாற்றங்களையும், ஒத்துழைப்பையும் நல்கி வருகிறது.
சர்வதேச பிரச்னைகளிலும், புவி வெப்பமயமாதல், கடல்சார் பாதுகாப்பு, இ - காமர்ஸ் போன்ற துறைகளிலும் இணைந்து செயலாற்றி வருகிறது,'' என்றார்.
கண்காட்சி தலைவர் பொன்ராம் பேசுகையில், கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி கவர்ச்சிகரமானதாக மாறியுள்ளது. காற்றாலைகள், சூரிய ஒளி, மரபுசாரா எரிசக்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது, என்றார்.
நிகழ்ச்சியில், மொரிஷியஸ் குடியரசின் பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் ஹேம்ராஜ் ரம்னியல் பங்கேற்று, தங்கள் நாட்டுக்கு கோவை மக்கள் சுற்றுலா வர வேண்டும்; முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கண்காட்சி, வரும் 12ல் நிறைவு பெறுகிறது. பங்கேற்க, முன்பதிவு அவசியம். பொதுமக்களுக்கு நுழைவு கட்டணம் 50 ரூபாய். 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு அனுமதி இல்லை.
வணிக பார்வையாளர்கள் காலை, 10:00 முதல் மாலை 3:00 மணி வரையிலும், பொதுமக்கள் மாலை 3:00 முதல் மாலை 5:00 மணி வரையிலும் பார்வையிடலாம்.
மாணவர்கள் ஆக.,12ல் பிற்பகல் 2:00 மணிக்கு மேல் அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கான நுழைவு கட்டணம் தலா 50 ரூபாய்.
