/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானைகள் புதிய வழித்தட திட்டத்துக்கு எதிர்ப்பு
/
யானைகள் புதிய வழித்தட திட்டத்துக்கு எதிர்ப்பு
ADDED : மே 09, 2024 11:20 PM

பெ.நா.பாளையம்:யானைகள், பழைய வழித்தடங்களை மாற்றி, புதிய வழித்தடங்களை ஏற்படுத்துவதாக வனத்துறை தெரிவித்துள்ள கருத்துக்கு, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மனித ஆக்கிரமிப்பு மற்றும் விவசாய தலையீடுகள் காரணமாக யானைகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த வழித்தடங்களில் இடையூறுகள் உருவாகி உள்ளன. வனவிலங்குகளின், வாழ்விட தொடர்ச்சியும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
இதனால் தமிழகத்தில் கடந்த, 10 ஆண்டுகளில் யானை- மனித மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தவிர்க்க, தமிழக அரசு சார்பில், யானைகளின் வாழ்விடங்களை பாதுகாக்கும் நோக்கில், யானைகள் வழித்தட திட்டம் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள தமிழக வனத்துறையின் சிறப்பு குழு சார்பில், தமிழகத்திற்கான யானைகள் வழித்தட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பொது மக்களின் கருத்துக்களை பெறும் நோக்கில், forests.tn.gov.in என்ற வனத்துறையின் இணையதள பக்கத்தில் திட்ட அறிக்கை பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள், இது குறித்த கருத்துக்களை, ஆலோசனைகளை, elephantcorridortnfd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பான, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் துடியலுார் அருகே தடாகத்தில் நடந்தது.
மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். இதில், தமிழக வனத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள யானைகளின் புதிய வழித்தட திட்ட அறிக்கை குறித்து, பொதுமக்கள் தங்களது ஆலோசனையும், கருத்துக்களையும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்க அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பல பகுதிகளில், புதிதாக யானைகளுக்கான வழித்தடங்களை ஏற்படுத்த உள்ளதாக, வனத்துறை தெரிவித்துள்ளது. இது தவறான வழிகாட்டுதல் ஆகும். விவசாயிகள் சங்கம் இதை வன்மையாக கண்டிக்கிறது.
ஏற்கனவே உள்ள வழித்தடத்தை மாற்றி, புதிய வழித்தடங்களை ஏற்படுத்துவதால், யானைகளால் விவசாயம் மற்றும் இதர தொழில்கள் பாதிப்பு அடையும்.
எனவே, அரசு இதை உரிய ஆய்வு செய்து, வழித்தட திட்டம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.