/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அபாய நிலையில் 'எனர்ஜி மீட்டர்' மின்பெட்டிகள்; ஆபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கணும்
/
அபாய நிலையில் 'எனர்ஜி மீட்டர்' மின்பெட்டிகள்; ஆபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கணும்
அபாய நிலையில் 'எனர்ஜி மீட்டர்' மின்பெட்டிகள்; ஆபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கணும்
அபாய நிலையில் 'எனர்ஜி மீட்டர்' மின்பெட்டிகள்; ஆபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கணும்
ADDED : ஜூன் 12, 2024 10:17 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில், தெருவிளக்கு பராமரிப்பு பணியில் நிலவும் மெத்தனம் காரணமாக, 'எனர்ஜி மீட்டர்' பொருத்திய பெட்டிகள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன.
பொள்ளாச்சி நகரில், தெருவிளக்கு பராமரிப்பு பணிகள், ஒப்பந்தம் வாயிலாக தனியாருக்கு ஒதுக்கப்பட்டு, அதற்கான செலவு தொகையை நகராட்சி நிர்வாகம் அளிக்கிறது. அவ்வகையில், தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும் பணியைக் கண்காணிக்க, நிரந்தர நகராட்சிப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த தனியார் நிறுவனத்தார், போதிய ஆட்களை பணிக்கு அமர்த்தாத நிலையில், பராமரிப்பு பணி தொய்வடைந்து வருகிறது. குறிப்பாக, கோட்டூர் ரோடு, ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட சில பகுதிகளில், தெருவிளக்குகள் சரிவர எரியாமல் உள்ளது.
இதேபோல, மின்வாரியத்தால், குறிப்பிட்ட தெருவிளக்குகளுக்கு ஒரு மின்கம்பத்தில் தகர பெட்டியில், 'எனர்ஜி மீட்டர்' வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மின் பெட்டிகளை முறையாக பராமரிக்காததால், பாதுகாப்பற்ற நிலையில் திறந்து கிடக்கிறது. ஒயர்கள் வெளியில் தொங்கிய நிலையில் காணப்படுகிறது.
சில இடங்களில் இந்த பெட்டிகள் சாய்ந்த நிலையிலும், கீழே தொங்கிவாறும் காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால், பராமரிப்பில்லாமல் கிடக்கும் மின்பெட்டிகளால் ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
மாதந்தோறும், கணக்கீடு செய்ய வரும் மின்வாரிய ஊழியர்களும் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதில்லை என, புகார் எழுகிறது.
தன்னார்வலர்கள் கூறியதாவது: ஆண்டு பராமரிப்பு என்ற பெயரில், நகராட்சி வாயிலாக தெருவிளக்கு பராமரிப்பு பணி ஒதுக்கப்படுகிறது. அவ்வகையில், பழுதடைந்த விளக்குகளை மாற்றியமைத்தல், தாழ்வாக உள்ள மின்கம்பிகளை சீரமைத்தல், 'எனர்ஜி மீட்டர்' பெட்டிகளைக் கண்காணித்தல் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இப்பணிகளைக் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க நகராட்சி பொறியாளர் பிரிவு மற்றும் மின்வாரியத்திற்கும் பொறுப்பு உள்ளது. ஆனால், தெருவிளக்கு பராமரிப்பு, 'எனர்ஜி மீட்டர்' பெட்டிகள் பராமரிப்பில் அக்கறை காட்டுவதில்லை. எனவே, நகரில் ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த பெட்டிகளைக் கண்டறிந்து, அவைகளை பராமரிக்க திட்டமிட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

