/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர் வரத்து கால்வாயை துார்வார வலியுறுத்தல்
/
நீர் வரத்து கால்வாயை துார்வார வலியுறுத்தல்
ADDED : ஏப் 18, 2024 04:04 AM
உடுமலை : ஒட்டுக்குளத்துக்கான நீர் வரத்து மண் கால்வாயை முழுமையாக துார்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை ஏழு குள பாசன திட்டத்திலுள்ள, குளங்கள் வாயிலாக நேரடியாக, 2,876 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு, அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் போதே, ஏழு குளங்களுக்கும், அரசாணை பெறப்பட்டு, தண்ணீர் திறப்பது வழக்கம். அடுக்குத்தொடராய் குளங்கள் அமைந்துள்ளதால், ஒவ்வொரு குளமாய் தண்ணீர் நிரப்புகின்றனர். இவ்வாறு, ஒவ்வொரு குளத்துக்கும், அருகிலுள்ள குளத்திலிருந்து தண்ணீர் வரும் வரத்து கால்வாய் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ளது.
உடுமலை நகரை ஒட்டி ஒட்டுக்குளம் அமைந்துள்ளது. இக்குளம், 90 ஏக்கர் பரப்பளவில், 10 அடி நீர் மட்ட உயரம், 14.11 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு உடையதாகும்.
இக்குளத்துக்கு, பெரியகுளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வரும், வரத்து கால்வாய், பல ஆண்டுகளாக, துார்வாரப்படாமல் உள்ளது.
இதனால், ஆங்காங்கே புதர் மண்டியும், கரைகள் சரிந்து, கால்வாய் இருப்பதே தெரியவில்லை.
மேலும், மண் திட்டுகள் அகற்றப்படாமல், குப்பைகளும் சில பகுதிகளில், நேரடியாக கால்வாயில், கொட்டப்படுகிறது.
எனவே, குளத்துக்கு நீர் வரத்து வரும் கால்வாயை, முழுமையாக துார்வாரி, கழிவுகள் கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு செய்ய வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

