/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருக்கும் குவாரிகளில் விதிமீறல்; புதுசா துவங்காதீங்க! கருத்து கேட்பு கூட்டத்தில் மக்கள் ஆவேசம்
/
இருக்கும் குவாரிகளில் விதிமீறல்; புதுசா துவங்காதீங்க! கருத்து கேட்பு கூட்டத்தில் மக்கள் ஆவேசம்
இருக்கும் குவாரிகளில் விதிமீறல்; புதுசா துவங்காதீங்க! கருத்து கேட்பு கூட்டத்தில் மக்கள் ஆவேசம்
இருக்கும் குவாரிகளில் விதிமீறல்; புதுசா துவங்காதீங்க! கருத்து கேட்பு கூட்டத்தில் மக்கள் ஆவேசம்
ADDED : ஆக 07, 2024 10:57 PM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட, நெ.10.முத்தூர் மற்றும் சங்கராயபுரம் பகுதியில் புதிதாக கல்குவாரி துவங்க கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
இதில், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, கோவை (தெற்கு) மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் சந்திரசேகர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள், சுற்றுசூழல் பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
சங்கராயபுரத்தில் சிவகாமி என்பவர், 1.20 ஹெக்டேர் அளவு கல்குவாரி, நெ.10.முத்தூரில் ராமலிங்கம் என்பவர், 2 ஹெக்டேர் அளவு கல்குவாரி துவங்க கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
குவாரியை ஆதரிப்போர் பேசுகையில், 'நெ.10.முத்தூர் மற்றும் சங்கராயபுரம் பகுதியில் மக்கள் பலர் குவாரி தொழிலை நம்பியுள்ளனர். இதில், டிரைவர், லாரி உரிமையாளர், கல் உடைக்கும் தொழிலாளி, லோடு மேன் என, 200 குடும்பத்தினர் பயனடைவர்.
இதனால் ஊராட்சிக்கு வருமானம் அதிகரிக்கும் மற்றும் மக்கள் அடிப்படை தேவைகளான ரோடு போன்றவைகள் அமைக்க சுரங்கம் மற்றும் கனிமம் நிதி உதவியாக இருக்கும்,' என்றனர்.
குவாரியை எதிர்ப்போர் பேசியதாவது:
இந்த இரண்டு குவாரியும் துவங்க பல சட்ட விரோத செயல்கள் நடந்து வருகிறது. ஒரு குவாரி துவங்க வேண்டும் என்றால், அதில் பல நடைமுறைகள் உள்ளது. எதையும் முறையாக பின்பற்றப்படுவதில்லை.
இதில், குவாரி துவங்கும் போது அதன் அருகாமையில் அதிக அளவு மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க வேண்டும். பெரும்பாலான குவாரிகளில் இது பின்பற்றப்படுவதில்லை. இதில், விதிமுறைக்கு முரணாக, நீரோடை இருக்கும் இடத்தில் குவாரி துவங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் இன்றி, 300 மீட்டர் சுற்றளவில் வீடுகள், 500 மீட்டர் சுற்றளவில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி, 10 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் நடைபாதை, தொழிலாளர் குடியிருப்புகள் உள்ளன.
இதை மறைத்து, குவாரிக்கு உரிமம் பெற நினைக்கின்றனர். இதற்கு அரசு அதிகாரிகள் பலர் ஆவணங்களை மாற்றி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துகின்றனர். எனவே, இந்த இரண்டு குவாரிகளுக்கும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.
அதிகாரிகள் பேசுகையில், 'கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட இருதரப்பு கருத்துகளும் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்படும். அதன்பின், எடுக்கப்படும் முடிவு குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும்,' என்றனர்.