/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை: ஆசிரியர்கள் தீவிரம்
/
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை: ஆசிரியர்கள் தீவிரம்
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை: ஆசிரியர்கள் தீவிரம்
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை: ஆசிரியர்கள் தீவிரம்
ADDED : மார் 25, 2024 12:11 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 2024 - 25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, அரசு தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஐந்தாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலும் மற்றும், 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் நேரடியாக வீடுகளில் சென்று சந்தித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பெண் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, தமிழக அரசின் மாணவர்கள் நலத்திட்டங்கள், அரசுப்பள்ளியில் பயின்று, கல்லுாரியில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு கிடைக்கும் (7.5 சதவீதம் ஒதுக்கீடு) அரிய வாய்ப்புகள், பெண்குழந்தைகளின் உயர்கல்விக்கான ஊக்கத்தொகை குறித்து தெரிவிக்கப்பட்டது. தரமான கல்வி பயில்வதை உறுதி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விளக்கப்பட்டது. மேலும் அருகிலுள்ள தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு நிறைவு செய்த மாணவியரை பள்ளிக்கு, வாகனங்களில் நேரில் அழைத்து வந்து, ைஹ டெக் லேப், அறிவியல் ஆய்வகம், கணித விளக்க மையம், திறன் மேம்பாட்டு மையம், ஸ்மார்ட் கிளாஸ், விலங்கியல் ஆய்வகம் போன்றவற்றின் செயல்பாடுகளை நேரில் பார்வையிடச் செய்து, மாணவியரை மகிழ்விக்கும் பல அறிவியல் செயல்பாடுகள் செய்து காண்பிக்கப்பட்டது. இதன் வாயிலாக, ஒரே நாளில் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட, மாணவியரை இப்பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது.
* பொள்ளாச்சி அருகே, வெள்ளாளபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது. ஊராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், உறுப்பினர்கள் சுப்பிரமணியம், அருண்பிரசாத், தலைமை ஆசிரியர் ரஷியாபீபி, ஆசிரியர்கள் சித்ரா, அம்சவேணி, பெற்றோர்கள் பங்கேற்றனர்.
இதில் பள்ளி மாணவியர் அரசின் இட ஒதுக்கீடு,வேலைவாய்ப்பு மற்றும் அரசின் நலத் திட்டங்களையும் எடுத்துக்கூறிய நாடகமும், மாணவர்களின் கோலாட்டம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் விழிப்புணர்வு பாடல் பாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
தொடர்ந்து அடுத்த ஆண்டில் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு கிரீடமும், மாலையும், பொன்னாடையும் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
அதன் பின் மாணவர்கள், வெள்ளாளபாளையம் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்று, நோட்டீஸ் கொடுத்தும், டிரம்ஸ் வாசித்தும், ஊர் மக்களுக்கு அரசு பள்ளியின் சேர்க்கை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

