/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எல்லோருக்கும் வயதாகும்... தோல் சுருங்கும்... நோய் வரும்! உணர்வார்களா நம் இளையதலைமுறையினர்?
/
எல்லோருக்கும் வயதாகும்... தோல் சுருங்கும்... நோய் வரும்! உணர்வார்களா நம் இளையதலைமுறையினர்?
எல்லோருக்கும் வயதாகும்... தோல் சுருங்கும்... நோய் வரும்! உணர்வார்களா நம் இளையதலைமுறையினர்?
எல்லோருக்கும் வயதாகும்... தோல் சுருங்கும்... நோய் வரும்! உணர்வார்களா நம் இளையதலைமுறையினர்?
ADDED : மார் 08, 2025 11:35 PM

வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கைவிடுவதில்லை. ஆனால், பிள்ளைகளால் கைவிடப்பட்டு, அனாதையாக்கப்பட்ட பெற்றோர்களின் எண்ணிக்கை, இன்றைக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
--தமிழகத்தின் நகர வீதிகளில் பிச்சை எடுப்பவர்களில், பெரும்பாலானவர்கள் முதியவர்கள். இதில் கணிசமானவர்கள் பெண்கள். இவர்கள் யாரும் பிச்சை எடுத்து வாழ்வதை, தொழிலாக கொண்டவர்கள் அல்ல; பெற்ற பிள்ளைகள், உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள்.
வயதான பெற்றோர்களை வீட்டில் வைத்து பராமரிக்க விரும்பாதவர்கள், அவர்களை சுமையாக நினைப்பவர்கள், கோவை போன்ற நகரங்களுக்கு அழைத்து வந்து, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கோவில்கள் போன்ற, பொது இடங்களில் விட்டு போய் விடுகின்றனர்.
தள்ளாத வயதில் திக்கும், திசையும் தெரியாமல் தெருவோரங்களில் பசியோடு பரிதவித்து நிற்கும் பல முதியோர்களை, இன்றைக்கு பார்க்க முடிகிறது.
உணவு, தண்ணீர் இல்லாமல் மயங்கிய நிலையில் படுத்து இருக்கும் முதியவர்கள், தன்னார்வலர்களின் உதவியால், அரசு முதியோர் காப்பகங்களுக்கு, அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இவர்களில் பலருக்கு பார்வை குறைபாடு, காது கேளாமை, சர்க்கரை, மிகை ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால், பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். இதில் வயதான பெண்களின் நிலை, மிகவும் பரிதாபமாக உள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள, 'ஈர நெஞ்சம்' அரசு முதியோர் காப்பகத்தில் உள்ள மூதாட்டிகள் கூறுவதை கேட்டால், கண்களில் கண்ணீர் கசிகிறது.
சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில், உயிர் கொடுத்த அம்மாக்கள், தங்கள் கடைசி காலத்தில் வடிக்கும் கண்ணீரின் வெப்பத்தை, இனியாவது பிள்ளைகள் உணரட்டும்.