/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் எஸ்.ஐ., என மிரட்டி பணம் பறித்த முன்னாள் காவலர் கைது
/
போலீஸ் எஸ்.ஐ., என மிரட்டி பணம் பறித்த முன்னாள் காவலர் கைது
போலீஸ் எஸ்.ஐ., என மிரட்டி பணம் பறித்த முன்னாள் காவலர் கைது
போலீஸ் எஸ்.ஐ., என மிரட்டி பணம் பறித்த முன்னாள் காவலர் கைது
ADDED : ஜூலை 11, 2024 06:23 AM

தொண்டாமுத்தூர் : பேரூர் படித்துறை அருகே உள்ள பெட்டிக்கடையில், போலீஸ் எஸ்.ஐ., எனக்கூறி, 15 ஆயிரம் பணம் பறித்த முன்னாள் காவலரை, போலீசார் கைது செய்தனர்.
பேரூர் படித்துறை அருகே வேடபட்டி ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை முன், பிரதாப்,26 என்பவரின் பெட்டிக்கடையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, ஒரு நபர் வந்து, தான் பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., என்றும், தனக்கு 15,000 ரூபாய் பணம் தர வேண்டும்; இல்லையென்றால், குட்கா விற்பதாகவும், மது விற்பதாகவும் பொய் வழக்கு போடுவதாக மிரட்டியுள்ளார்.
பணமில்லையா...ஏறு பைக்குல!
பணம் கொடுக்க மறுத்ததால், அந்த நபர் பிரதாப்பை, தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி, உக்கடத்திற்கு அழைத்து, அங்கும் மிரட்டியுள்ளார். அப்போது, பயந்த பிரதாப், 15,000 ரூபாயை, அந்நபரிடம் கொடுத்துள்ளார். அதன்பின், பிரதாப்பை அங்கேயே இறக்கி விட்டுவிட்டு, அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
பிரதாப், இதுகுறித்து தனது நண்பர்களிடம் கூறி விசாரித்தபோது, அதுபோன்ற எஸ்.ஐ., யாருமில்லை என, தெரிவித்துள்ளனர். இதன்பின்பே, பிரதாப்பிற்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில், அந்நபர் நேற்று, மாதம்பட்டியில் உள்ள ஹரிஹரன் என்பவரின் பெட்டிக்கடைக்கு சென்று, எஸ்.ஐ.,எனக்கூறி பணம் கேட்டுள்ளார்.
சிக்கினார் டூபாக்கூர்!
அப்போது ஹரிஹரன், பணம் இல்லை எனக்கூறி அனுப்பி விட்டார். அப்போது, இதேபோல, தனது நண்பரான பேரூரில் பெட்டிக்கடை வைத்திருந்த பிரதாப் கூறியது நினைவுக்கு வந்து, பிரதாப்பிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பின், பிரதாப் தனது நண்பர்களுடன் மாதம்பட்டிக்கு வந்து, அங்கு சுற்றித்திரிந்த போலி எஸ்.ஐ.,யை பிடித்து, தொண்டாமுத்தூர் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து ஒப்படைத்துள்ளனர்.
அங்கு, தொண்டாமுத்தூர் இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்நபர், கணபதியை சேர்ந்த பெருமாள்,50 என்பது தெரிந்தது.
இவர் 1997ம் ஆண்டு, காவலராக பணியாற்றியதும், 2010ம் ஆண்டு, போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்தபோது, சூதாட்டத்தில் சம்பந்தப்பட்டதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டு, விசாரணைக்குப்பின், 2012ம் ஆண்டு, காவலர் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதும், தற்போது, பா.ஜ., மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு துணை தலைவராக இருப்பதும் தெரியவந்தது. அதோடு, எஸ்.ஐ., எனக்கூறி, கோவை மாவட்டத்தில், சூலூர், துடியலூர், தடாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், இதுபோன்று மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து, மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட பெருமாளை, தொண்டாமுத்தூர் போலீசார் கைது செய்து, 'பாரதிய நியாய சன்ஹிதா' சட்டத்தின்கீழ், பொது ஊழியர் போல ஆள்மாறாட்டம் செய்தல், ஆள்மாறாட்டம் செய்தல், மிரட்டி பணம் பறித்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

