/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாழ்வான மின் கம்பிகள் மாற்றியமைக்க எதிர்பார்ப்பு
/
தாழ்வான மின் கம்பிகள் மாற்றியமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 08, 2024 12:21 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்திடவும், வலுவிழந்த மின் இணைப்பு கம்பங்களை மாற்றியமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை மின் பகிர்மான வட்டம், பொள்ளாச்சி கோட்டத்தில், வீடு, தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வணிகம் என, பல லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மின்கம்பங்கள் வழியாக துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், நகரில், அதிக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரே கம்பத்தில் அதிகப்படியான கட்டடங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், சில பகுதிகளில், உயரழுத்த மின் கம்பிகள் கட்டடங்களை உரசும் வகையில் தாழ்வாகவும் உள்ளது.
குறிப்பாக, தெப்பக்குளம் வீதி, மீன்கரை ரோடு, வெங்கட்ரமணன் வீதி என முக்கிய வழித்தடங்களில், இதுபோன்ற மின் இணைப்பு கம்பிகள் காணப்படுகின்றன. கனரக வாகனத்தில் அதிகப்படியான சரக்குகளை ஏற்றிச் சென்றால், மின் கம்பிகளில் உரசி விபத்து ஏற்படும் சூழல் நிலவும்.
மின் விபத்துகளை தவிர்க்க, ஆபத்தான நிலையில் உள்ள மின் இணைப்பு கம்பிகளை மாற்றியமைக்க வேண்டும். இதேபோல, வலுவிழந்த நிலையில் உள்ள கம்பங்களைக் கண்டறிந்து மாற்றியமைக்கவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.