/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செலவின பார்வையாளர்கள் களமிறங்கிட்டாங்க! தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனை
/
செலவின பார்வையாளர்கள் களமிறங்கிட்டாங்க! தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனை
செலவின பார்வையாளர்கள் களமிறங்கிட்டாங்க! தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனை
செலவின பார்வையாளர்கள் களமிறங்கிட்டாங்க! தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனை
UPDATED : மார் 22, 2024 12:20 PM
ADDED : மார் 22, 2024 12:20 AM

கோவை;கோவை லோக்பா தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள, இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள், வேட்பாளர்கள் செய்யும் செலவினங்களை கண்காணிப்பது தொடர்பாக, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு நேற்று அறிவுரை வழங்கினர்.
கோவை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பல்லடம், சூலுார், சிங்காநல்லுார் சட்டசபை தொகுதிகளுக்கு கீது படோலியா கோவை வடக்கு, தெற்கு, கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிகளுக்கு உம்மே பர்டினா ஆடில் ஆகியோரும், செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செய்யும் செலவினங்களை பார்வையிட்டு, வீடியோவில் பதிவு செய்வர். நிர்ணயித்துள்ள தொகையை காட்டிலும் அதிகமாக செலவிடுகிறார்களா என கண்காணித்து, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பர்.
கோவை வந்துள்ள செலவின பார்வையாளர்கள், அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கின்றனர். இவர்களது தலைமையில், கோவை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்தி குமார், டி.ஆர்.ஓ., ஷர்மிளா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்வேதா, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், எஸ்.பி., பத்ரிநாராயணன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தேர்தல் பரப்புரை, பொதுக்கூட்டங்கள், போஸ்டர்கள், பதாகைகள், வாகனங்கள், பிரசார பொருட்கள் பயன்படுத்துவது போன்ற தேர்தல் செலவினங்களை வீடியோ கண்காணிப்பு குழு பதிவு செய்ய வேண்டும். தேர்தல் வழிகாட்டு நெறிமுறைப்படி, வேட்பாளரின் செலவு பதிவேட்டை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தையும் கணக்கில் கொண்டு வர வேண்டும்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் வரை வேட்பாளர்கள் செய்யும் செலவை கட்சிக்கணக்கில் வைத்திருக்க வேண்டும்; வேட்பு மனு தாக்கல் செய்ததும் வேட்பாளர் கணக்கில் சேர்க்க வேண்டும்.
பறக்கும் படை அலுவலர்கள், செலவினங்கள்  கண்காணிக்க நியமித்துள்ள குழுக்கள் இப்பணியை முறையாக கண்காணிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், மதுபானங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் அதிகளவில் கூடும் கோவில் திருவிழாக்களை கண்காணிக்க வேண்டும். கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அனைவரும் வாகனச் சோதனையை முறையாக மேற்கொள்ள வேண்டும் என, செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தினர்.
அதன்பின், கண்காணிப்பு அறைக்கு சென்று, 'டிவி'களில் ஒளிபரப்பாகும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை கண்காணிப்பது மற்றும் பதிவேடு பராமரிக்கப்படுகிறதா என பார்வையிட்டனர். அரசியல் கட்சியினர் செய்யும் செலவினங்கள் தொடர்பாக, இவர்களின் மொபைல்போனுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

