/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளைபொருளுக்கு ஆதார விலை கேட்டு விவசாயிகள் போராட்டம்
/
விளைபொருளுக்கு ஆதார விலை கேட்டு விவசாயிகள் போராட்டம்
விளைபொருளுக்கு ஆதார விலை கேட்டு விவசாயிகள் போராட்டம்
விளைபொருளுக்கு ஆதார விலை கேட்டு விவசாயிகள் போராட்டம்
ADDED : ஆக 15, 2024 11:46 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், என, போராட்டத்தில் ஈடுபட்ட, விவசாயிகள் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், நாராயணசாமி நாயுடு சங்கம் சார்பில், மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் கடன் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்திட வேண்டும் என வலியுறுத்தி டிராக்டர் பேரணி நடத்துவதாக அறிவித்தனர்.
இதற்கு போலீசார் அனுமதி கொடுக்காமல், நகரப்பகுதிக்குள் டிராக்டர் வருவதற்கு முன்பே தடுத்து நிறுத்தினர். டிராக்டர் அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவள்ளுவர் திடலில், திரண்ட விவசாயிகளை அவசர அவசரமாக கைது செய்தனர். போராட்டம் துவங்குவதற்கு முன்பே கைது நடவடிக்கை துவங்கியதால், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால், போலீசார், விவசாயிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, விவசாயிகளை குண்டு கட்டாக துாக்கி போலீசார் வாகனத்தில் ஏற்றினர். சம்பவ இடத்துக்கு வந்த கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் முருகானந்த கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், 20 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரை கண்டித்து விவசாயிகள் கோஷமிட்டனர்.

