/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடைக்கு தயாராகும் விவசாயிகள்; தீவனங்கள் இருப்பு வைப்பு
/
கோடைக்கு தயாராகும் விவசாயிகள்; தீவனங்கள் இருப்பு வைப்பு
கோடைக்கு தயாராகும் விவசாயிகள்; தீவனங்கள் இருப்பு வைப்பு
கோடைக்கு தயாராகும் விவசாயிகள்; தீவனங்கள் இருப்பு வைப்பு
ADDED : பிப் 21, 2025 11:00 PM
பொள்ளாச்சி; கிராம விவசாயிகள் பலர், கால்நடைகளின் நலன் கருதி, தீவனங்களை முன்கூட்டியே சேகரித்து இருப்பு வைக்கத் தொடங்கியுள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், விவசாயத்துக்கு அடுத்தாற்போல், கால்நடைகள் வளர்த்தல் பிரதான தொழிலாகும். ஆனால், கால்நடைகளுக்கான தீவனத் தேவையை பூர்த்தி செய்வது, விவசாயிகளுக்கு பெரும் சவாலாகவே உள்ளது.
கால்நடை வளர்ப்பில், அதன் பராமரிப்பு செலவில், மூன்றில் இரண்டு பங்கு, தீவனங்களுக்காகவே செலவாகிறது. கால்நடைகளுக்கு சமச்சீர் தீவனம் அளிக்கவும், அதிக பால் உற்பத்தி மற்றும் உடல் இறைச்சி கூடவும், காலத்திற்கு ஏற்ற தீவனத்தை தயாரித்து அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
அதனால், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பியும், பசுந்தீவனம் உற்பத்தி செய்தும் கால்நடைகளுக்கு அளித்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இனிவரும் நாட்களில், வெயிலின் தாக்கம் அதிகரித்து, தீவனத் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், கிராம விவசாயிகள் பலரும், தீவனத்தை சேகரித்து, இருப்பு வைக்க தொடங்கி உள்ளனர்.
குறிப்பாக, அறுவடை நேரத்தை பயன்படுத்தி, தானிய கதிர்களை வாங்கி இருப்பு வைக்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'மழை காலங்களில் அதிகமாக விளைந்த பசுந்தீவனத்தை, பதப்படுத்தி வைக்கப்படுகிறது. இதேபோல, வைக்கோல் மற்றும் சோள தீவனத் தட்டு, யூரியா சத்துாட்டி மாற்றம் செய்து, இருப்பு வைக்கப்படும். அடர் தீவனமாக மக்காச்சோளம், கம்பு, புண்ணாக்கு மற்றும் தவிடு வகைகள், ஈரம் படாமல் சேமித்து வைக்கப்படும்,' என்றனர்.