/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைநீர் வீணாவதால் விவசாயிகள் ஆதங்கம்
/
மழைநீர் வீணாவதால் விவசாயிகள் ஆதங்கம்
ADDED : ஜூலை 31, 2024 02:43 AM
பொள்ளாச்சி;வால்பாறை, சோலையாறு அணை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறை, சோலையாறு பகுதியில் பெய்யும் கனமழையால், சோலையாறு அணை நிரம்பியுள்ளது. இந்நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், மதகுகள் திறக்கப்பட்டு, உபரிநீர் கேரளாவுக்கு செல்கிறது. அணைகள் நிரம்பியுள்ளதை காண, பி.ஏ.பி., பாசன விவசாயிகள் பல குழுக்களாக சோலையாறு அணை பகுதிக்கு சென்றனர்.
இதில், செஞ்சேரிமலை பகுதியை சேர்ந்த விவசாயிகள், சோலையாறு மதகு பகுதி பாலத்தில், திடீரென தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர்.
அவர்கள் வெளியிட்ட வீடியோ பதிவில், 'சோலையாறு, ஆழியாறு அணைகள் நிரம்பி விட்டன. பரம்பிக்குளம் அணை நிரம்பி வருகிறது. ஆனால், காண்டூர் கால்வாய் பணிகளை நிறைவு செய்யாததால், திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு செல்ல முடியவில்லை.
செஞ்சேரிமலை, பல்லடம் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இந்நிலையில், அணையில் இருந்து உபரிநீர் வீணாவது வேதனையளிக்கிறது.
மழைநீர் வீணாகாமல் பயன்படுத்தவும், காண்டூர் கால்வாய் பணிகளை விரைவுபடுத்தி முடிக்கவும், அதிகாரிகள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்,' என, ஆதங்கத்தை வெளிப்படுத்திஉள்ளனர்.

