/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை விபத்தில் தந்தை, மகன் பலி
/
சாலை விபத்தில் தந்தை, மகன் பலி
ADDED : மார் 04, 2025 12:21 AM
மேட்டுப்பாளையம்:
சிறுமுகை அருகே நடந்த சாலை விபத்தில் தந்தை, மகன் பலியானார்கள்.
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகையை சேர்ந்தவர் கார்த்திக் பாபு, 32. விவசாயி. இவரது மனைவி பிரியா, 30. இந்த தம்பதியினருக்கு சாய் மித்ரன், 6, என்ற மகன் உள்ளார்.
கார்த்திக் பாபு தனது மனைவி மற்றும் மகனை அழைத்துக் கொண்டு, உறவினர் ஒருவரின் திருமணம் விஷயமாக சென்னம்பாளையம் பகுதிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த உறவினர் ஒருவரின் மேக்சி கேப் வாகனத்தை கார்த்திக் பாபு ஓட்ட, அவருடன் மகன் சாய் மித்திரன் மற்றும் உறவினர் குகன் ஆகியோர் அதில் பயணம் செய்தனர். சென்னம்பாளையம் - தொட்டபாவி சாலையில் வாகனம் சென்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து உருண்டது.
இதில் மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் சாய் மித்திரன் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கார்த்திக் பாபு மற்றும் குகன் ஆகியோருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திக் பாபு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குகன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக சிறுமுகை போலீசார் விசாரித்து வருகின்றனர்.----