அனுமதியின்றி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால் அச்சம்
அனுமதியின்றி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால் அச்சம்
ADDED : மே 14, 2026 11:43 PM
அன்னுார்: அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், போக்குவரத்து நெரிசலான பகுதிகளில், பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு கோர்ட் தடை விதித்துள்ளது. மேலும் நகராட்சிகள் சட்டத்தின்படி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களில் அரசு அனுமதி எண் மற்றும் தேதி ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். ஆனால், அன்னுாரில் பிரதான சாலையில், பஸ் ஸ்டாண்ட் அருகே கைகாட்டியில் ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பஸ் ஸ்டாண்டிலிருந்து ஓதிமலை சாலை வளைவு வரை, அக்கட்சியின் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
பேனர்கள் வைக்கப்பட்டு 10 நாட்கள் ஆகியும் இன்னும் அகற்றப்படவில்லை. அதிகாரிகளும் இதை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். தற்போது விடுமுறை காலம் என்பதால், நீலகிரி மாவட்டத்துக்கு, அன்னுார் வழியாக அதிகளவில் சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. ‘வரிசையாக வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, பிளக்ஸ் பேனர்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
