/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் நிலத்துக்கு வேலி; அதிகாரிகள் தீவிரம்! பாதுகாப்பு கொடுக்காமல் போலீசார் 'கல்தா'
/
கோவில் நிலத்துக்கு வேலி; அதிகாரிகள் தீவிரம்! பாதுகாப்பு கொடுக்காமல் போலீசார் 'கல்தா'
கோவில் நிலத்துக்கு வேலி; அதிகாரிகள் தீவிரம்! பாதுகாப்பு கொடுக்காமல் போலீசார் 'கல்தா'
கோவில் நிலத்துக்கு வேலி; அதிகாரிகள் தீவிரம்! பாதுகாப்பு கொடுக்காமல் போலீசார் 'கல்தா'
ADDED : ஆக 06, 2024 09:56 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து, கம்பிவேலி அமைக்கும் பணியில், ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். பாதுகாப்பு கொடுக்காமல் போலீசார் 'கல்தா' கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சியில், ஹிந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்காக கடந்த, 1939ம் ஆண்டு கருப்பண்ண ஆசாரி என்பவர், ஆருத்ரா தரிசன கட்டளைக்காக, 17 சென்ட் இடத்தை, தேர்நிலையம் அருகே வழங்கினார்.
இந்த இடம் கோவில் கட்டுப்பாட்டில் இருந்தது. அதில், ரோடு விரிவாக்கத்துக்காக, 7 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மீதம் உள்ள, 10 சென்ட் இடம் பயன்பாடின்றி இருந்தது. அங்கு தற்காலிக ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.
இந்நிலையில், இந்த இடத்தை சுத்தம் செய்து, கோவில் நிர்வாகம் சார்பில் கடந்த ஜூன் மாதம், மூன்று ஆண்டு குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது. மாதம், 25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏலம் எடுத்தவருக்காக அந்த இடத்தை அளவீடு செய்து, கம்பிவேலி அமைத்து வழங்க கோவில் நிர்வாகம் திட்டமிட்டது. ஏலம் எடுத்து ஒரு மாதமாகியும், இன்னும் அந்த இடத்தில் உள்ள தற்காலிக ஆட்டோ ஸ்டாண்ட் அகற்றப்படாமல் இருந்தது.
இந்நிலையில், நேற்று கோவில் இடத்தை சுத்தம் செய்து கம்பி வேலி அமைக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, வேலி அமைக்கும் பணியில் ஹிந்துசமய அறநிலையத்துறை ஆய்வர் பாக்கியவதி, செயல் அலுவலர்கள் கந்தசாமி, தேவிப்பிரியா, ராமகிருஷ்ணன், கதிரவன், ேஹமா ஷாலினி மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அறநிலையத்துறை டிஜிட்டல் சர்வேயர்கள் குணசேகரன், கார்த்திக் ஆகியோர் அளவீடு பணிகளை மேற்கொண்டனர்.அங்கு அளவீடு செய்து, கம்பிவேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதை கண்ட ஆட்டோ டிரைவர்கள், அவர்களாக முன்வந்து, வாகனங்களை வெளியே எடுத்தனர்.
என்ன மர்மமோ!
ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், நிலத்தை அளவீடு செய்து கம்பிவேலி அமைக்க உள்ளதாக, பாதுகாப்பு வழங்க அனுமதி வேண்டி போலீசாருக்கு உரிய முறையில் கடிதம் கொடுத்தனர். மேலும், உயர் அதிகாரிகள் உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று போலீசாரிடம் வலியுறுத்தினர்.
ஆனால், சம்பவ இடத்துக்கு போலீசார் வரவில்லை. காத்திருந்த அதிகாரிகள், போலீசாரை அழைத்தும் தகவல் வரவில்லை என காரணம் மட்டுமே கூறினர். இதனால், அதிகாரிகள், அவர்களே, ஆய்வு செய்து அளவீடு பணிகளை மேற்கொண்டனர்.
ஆளுங்கட்சி தலையீடு
ஏலம் விடப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் அந்த இடத்தில் ஏலம் எடுத்தவர் கடை அமைக்க முடியாத நிலை இருந்தது. அதில், ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் தலையீடு உள்ளதாக கூறப்பட்டது. அங்கு, கற்கள் பதிக்க எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
அதனால், நேற்று அதிகாரிகள் வந்தும் போலீசார் வர தயக்கம் காட்டியதற்கு, ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் அழுத்தமே காரணம் என, கூறப்படுகிறது.