ADDED : மே 23, 2026 04:20 PM
கோவை: தீயணைப்புத்துறை சார்பில், பீளமேடு பி.எஸ்.ஜி.மருத்துவமனை வளாகத்தில், உயர்மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் எடுக்க வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை பயிற்சி நேற்று நடந்தது.
மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் கணேசன் தலைமையில் வீரர்கள் ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர். விபத்தின்போது நோயாளிகளை பத்திரமாக மீட்பது, தீ பரவும் சூழலில் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பயிற்சியின் போது தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் செயல்பட்டு, பாதிக்கப்பட்டவர்களை தோளில் சுமந்து மீட்பது, ஸ்ட்ரெச்சர் மூலம் வெளியேற்றுவது போன்ற அவசரகால மீட்பு நடவடிக்கைகளை செய்துகாட்டினர்.
தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தும் முறை குறித்தும் மருத்துவமனை பணியாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி, தீத்தடுப்பு குழு வீரர்கள், மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
