ADDED : மே 17, 2024 12:54 AM
கோவை;மாவட்ட அளவில் நடந்த முதல் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், ஜாலி ரோவர்ஸ் அணியை, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ராமகிருஷ்ணா மில்ஸ் அணி வீழ்த்தியது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'லட்சுமி கார்டு குளோத்திங் கோப்பை'க்கான முதல் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, நவ இந்தியா ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
இப்போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஜாலிரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய ஜாலிரோவர்ஸ் அணிக்கு நிர்மல் குமார் (72), செந்துார் (39), அகிலேஸ்வர் (37) ஆகியோரின் ஆட்டம் கைகொடுத்தது. 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்கள் சேர்த்தது. அஜய் கிருஷ்ணா நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
அடுத்து விளையாடிய ராமகிருஷ்ணா அணியின் ஹரிநிஷாந்த் (69), மான் பாப்னா (61*) அசத்தலாக விளையாட, 42.4 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 216 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை கடந்தது. ஜாலி ரோவர்ஸ் அணியின் ஸ்ரீநாத் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
