/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'முதலில் காதல் கவிதை; பின்னரே சமூக சிந்தனை'
/
'முதலில் காதல் கவிதை; பின்னரே சமூக சிந்தனை'
ADDED : ஆக 12, 2024 12:33 AM

கோவை:கோவை வசந்தவாசல் கவிமன்றம் சார்பில், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற சுதந்திர தின கவியரங்கம் மற்றும் நுால் வெளியீட்டு விழா, கோவையில் நேற்று நடந்தது.
கவியரங்கத்துக்கு, கவிஞர் தமிழ் மணிகண்டன் தலைமை வகித்தார். கல்லுாரி மாணவர்கள் வைஷ்ணவி, மதுஸ்ரீ, அருள் பெனடிக்ட், சரண்யாதேவி, ஜெனிபர், லோகேஷ் ஆகியோர் சுதந்திர தின கவிதை வாசித்தனர்.
கவிஞர் கிருத்திகா எழுதிய கவிதை நுாலை வெளியிட்டு, எழுத்தாளர் முகில் தினகரன் பேசுகையில், ''தமிழ், கவிதைகளால் உருவான மொழி. நம் இலக்கியங்கள் எல்லாம் கவிதையாகதான் எழுதப்பட்டுள்ளன. செய்யுள் வடிவமாக இருந்த தமிழ் கவிதை, மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ என, பரிணாமம் அடைந்து, இன்றைக்கு நவீன கவிதையாக வளர்ந்துள்ளது.
மாணவர்கள் கல்லுாரியில் படிக்கும் காலத்திலேயே, கவிதை எழுத துவங்கி விடுகின்றனர். ஆரம்பத்தில் காதல் கவிதைகளை எழுதும் அவர்கள், பின்னர்தான் சமூகம் பற்றி சிந்திக்கின்றனர்.
இந்திய சுதந்திர தினம் பற்றி வித்தியாசமான கோணத்தில், மாணவர்கள் எழுதியுள்ள கவிதைகள், இந்த சமூகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கும்,'' என்றார்.
கவிஞர்கள் சுந்தரராமன், அன்பு, சிவசக்தி வடிவேல், ந.கி.பிரசாத், தன்மானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.