/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ்-கார் மோதி விபத்து ஐந்து பேர் பரிதாப மரணம்
/
பஸ்-கார் மோதி விபத்து ஐந்து பேர் பரிதாப மரணம்
ADDED : பிப் 27, 2025 02:20 AM

கோவை:கரூரை அடுத்த குளித்தலை பகுதியில், நேற்று அதிகாலை நடந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட, ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோவை, குனியமுத்துார், சுகுணாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 52; பெயின்டர். இவரது மனைவி கலையரசி, 50. தம்பதியின் மகன் அருண், 32, மகள் அகல்யா, 30. அருண், டிப்ளமா படிப்பு முடித்துள்ளார்.
அகல்யா தனியார் வங்கி ஊழியர்.
குடும்பத்தினருடன் சிவராத்திரியன்று தஞ்சாவூர், ஒரத்தநாட்டில் உள்ள தங்கள் குலதெய்வ கோவிலான அக்னிவீரனார் கோவிலுக்குச் செல்ல, செல்வராஜ் முடிவு செய்தார்.
அருண், தனது நெருங்கிய நண்பரான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு, 33 என்பவரையும் கோவிலுக்கு வருமாறு அழைத்தார்.
அனைவரும் விஷ்ணுவின் நண்பருக்கு சொந்தமான காரில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், கோவை சுகுணாபுரத்தில் இருந்து புறப்பட்டனர். காரை விஷ்ணு ஓட்டினார்.
நேற்று அதிகாலை 2:00 மணியளவில் கார் கரூர் - திருச்சி சாலையில் குளித்தலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திருச்சி அறந்தாங்கியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பஸ், கார் மீது நேருக்கு நேர் மோதியது. அதில் காரின் பாதி பஸ்சுக்குள் சிக்கியது. காரில் பயணித்த ஐந்து பேரும் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பஸ்சில் பயணித்தவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. பயணியரை வேறு பஸ்சில் திருப்பூருக்கு அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவர் லோகநாதனை, 51 போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

