/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்தியாவசியப் பொருட்களுக்கு நிலையான விலை! உறுதி செய்ய முதன்மை செயலர் அறிவுரை
/
அத்தியாவசியப் பொருட்களுக்கு நிலையான விலை! உறுதி செய்ய முதன்மை செயலர் அறிவுரை
அத்தியாவசியப் பொருட்களுக்கு நிலையான விலை! உறுதி செய்ய முதன்மை செயலர் அறிவுரை
அத்தியாவசியப் பொருட்களுக்கு நிலையான விலை! உறுதி செய்ய முதன்மை செயலர் அறிவுரை
ADDED : மே 17, 2024 01:02 AM

கோவை;'நுகர்வோர் பொருட்கள் விற்பனை செய்யும் பெட்ரோல் பங்க்குகள், மளிகை கடைகள், ஷாப்பிங் மால்கள், காஸ் சிலிண்டர் வினியோகம் மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, நிலையான விலையை உறுதி செய்ய வேண்டும்' என, அரசு அதிகாரிகளுக்கு, தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலர் ஹர்சகாய் மீனா அறிவுறுத்தினார்.
கோவை மாவட்டத்தில், 1,536 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. 11 லட்சத்து, 42 ஆயிரத்து, 536 கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு இருப்பு இருக்கிறதா என, கருமத்தம்பட்டி மற்றும் பூசாரிபாளையத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கை, முதன்மை செயலர் ஹர்சகாய் மீனா நேற்று ஆய்வு செய்தார். அரிசி மற்றும் கோதுமை தரத்தை பரிசோதனை செய்தார்.
பின், கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ஷர்மிளா முன்னிலை வகித்தார்.
அதில், முதன்மை செயலர் ஹர்சகாய் மீனா கூறியதாவது:
அனைத்து பகுதி ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை, வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அரசு ஒதுக்கும் பொருட்களை எவ்வித தாமதமுமின்றி, பொதுமக்களுக்கு உரிய நேரத்துக்குள் ரேஷன் கடை ஊழியர்கள் வினியோகிக்க வேண்டும். பொருட்கள் இருப்பு விபரங்களை, கடைகளில் உள்ள கரும்பலகையில் கார்டுதாரர்கள் அறிந்துகொள்ளும் வகையில், தினமும் எழுத வேண்டும்.
ரேஷன் கடைகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதி இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும். கட்டமைப்பு இல்லாத கடைகளுக்கு வசதி கோரி, அரசுக்கு முன்மொழிவு அனுப்பலாம். ரேஷன் பொருட்களை சேமித்து வைக்கும் குடோன்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். இப்பொருட்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நுகர்வோர் உபயோகிக்கும் பொருட்கள் விற்பனை செய்யும் பெட்ரோல் பங்க்குகள், மளிகை கடைகள், ஷாப்பிங் மால்கள், காஸ் சிலிண்டர் வினியோகம் மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக ஆய்வு செய்து, பொருட்களின் நிலையான விலையை வட்ட மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கூட்டத்தில், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் பழனிகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அழகிரி, துணை பதிவாளர் ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

