ADDED : மார் 25, 2024 10:46 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை தொகுதியில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் வாயிலாக, 16 லட்சத்து, 23 ஆயிரத்து, 300 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், தேர்தல் விதிமுறை மீறலை தடுக்கும் வகையில், பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழு வாயிலாக கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
* பறக்கும் படையினர், கோட்டூர் ரோடு பஸ் ஸ்டாப் அருகே, வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, சின்னவேடம்பட்டியை சேர்ந்த கோபால், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, ஒரு லட்சத்து, ஆறு ஆயிரத்து, 300 ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
* கோபாலபுரம் சோதனைச்சாவடியில் நிலையான கண்காணிப்பு குழுவினர், அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த செல்லத்துரை, முறையான ஆவணங்களின்றி, 62,500 ரூபாய் பணம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
* நிலையான கண்காணிப்பு குழுவினர், நெகமம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டு, கேரளாவில் இருந்து வந்த சாசன், சிராஜூதீன், பாலா ஆகியோர் முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, ஒரு லட்சத்து, 54 ஆயிரத்து, 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
* இதேபோன்று பறக்கும்படை குழுவினர், சிறுகளந்தை பகுதியில் வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தில் பெங்களூருவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 10 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
* வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை முக்கோணம் பகுதியில், பறக்கும்படை அதிகாரிகள், வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், பாலக்காட்டை சேர்ந்த பூபதி முறையான ஆவணங்களின் கொண்டு வந்த, ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
உடுமலை
உடுமலை சட்டசபை தொகுதி, தேர்தல் பறக்கும் படை எண் - 2 சேர்ந்த, அலுவலர் நடராஜ், எஸ்.எஸ்.ஐ., செல்வம், போலீசார் மாரிமுத்து, விக்ரம் கொண்ட குழுவினர், குறிஞ்சேரி, புதிய நான்கு வழிச்சாலை அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தாராபுரம், பெரிய குமாரபாளையத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி, தேர்தல் விதி மீறி, காரில், 1.50 லட்சம் ரூபாய் கொண்டு வந்தது தெரிந்தது. இதனையடுத்து, அத்தொகை பறிமுதல் செய்து, உடுமலை தாசில்தார் சுந்தரத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
