/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொல்ல மறந்த கதை... ஆனாலும் சொல்கிறார்கள் இதை!
/
சொல்ல மறந்த கதை... ஆனாலும் சொல்கிறார்கள் இதை!
ADDED : மே 26, 2024 12:36 AM

பழங்காலத்தில் சிறுவர்களுக்கு கதை தான் பெரிய திரைப்படம்.
சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு அம்மா சொல்லும் கதை, விழித்திருக்கும் குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டி சொல்லும் கதை என பரந்து விரியும் கற்பனை உலகம்.
உருமாறி விட்ட உலகத்தில், நீண்ட கதைகள் கேட்பது, பல குழந்தைகளுக்கு பிடிக்காமல் போகிறது. ஆனால், இன்னமும் உயிர் பெற்று தான் இருக்கின்றன கதைகள்.
சமூக வலைதளங்களை பார்த்து, தடம் மாறாமல் இருக்க, முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்ற கூற்றுக்கு இணங்க, இந்த ஊடகம் வாயிலாக ஒரு நிமிட கதை சொல்லும் பாங்கு, இப்போது பிரபலமாகியிருக்கிறது.
திருச்சியில் 'கதை உலகம்' என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு துவங்கப்பட்டு, அதில் குழந்தைகள், சிறுவர்களுக்கான ஒரு நிமிட கதைகள், ஆடியோ வடிவில் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
இக்குழுவில் இணைந்திருக்கும் பெற்றோர், அதை குழந்தைகளிடம் காண்பித்து வருகின்றனர். 'கதை கதையாம்' என்ற மற்றொரு வாட்ஸ் ஆப் குழு, தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இயங்கி வருகிறது.
குழுவில் கதைகளை பதிவிடும் திருச்சியை சேர்ந்த முதுகலை தமிழாசிரியர் செசிலிஇடம் பேசினோம்...
தவிர்த்து விட்டு போன பல விஷயங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில், ஒரு நிமிட கதை சொல்லி, குழுவில் பதிவு செய்யப்படுகிறது.
நல்லொழுக்கம், ஒற்றுமை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, இயற்கை நேசிப்பு உட்பட பல தலைப்புகளில் கதைகள் பதிவிடப்படுகின்றன.
சிறார் எழுத்தாளர்களின் புத்தகங்களில் இருந்து, அவர்கள் அனுமதியோடு, கதைகள் தேர்வு செய்யப்படுகின்றன.
தவிர, கதை, கட்டுரையை எழுதுவது குறித்தும், சிந்தனை திறனை மேம்படுத்துவது குறித்தும், சிறுவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
மறந்து போன பல நல்ல விஷயங்களை, மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. அதில் கதையும் ஒன்று. இக்குழுவினர் அதை செய்து வருவது பாராட்டுக்குரியதுதான்!