/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் அதிகாரிகளாக நடித்து மோசடி; மூவருக்கு 'குண்டாஸ்'
/
போலீஸ் அதிகாரிகளாக நடித்து மோசடி; மூவருக்கு 'குண்டாஸ்'
போலீஸ் அதிகாரிகளாக நடித்து மோசடி; மூவருக்கு 'குண்டாஸ்'
போலீஸ் அதிகாரிகளாக நடித்து மோசடி; மூவருக்கு 'குண்டாஸ்'
ADDED : ஆக 03, 2024 09:59 PM

கோவை : கோவை, ராம் நகரை சேர்ந்தவர் ஜார்ஜ்,75. கடந்த ஜூன், 8ம் தேதி மும்பை பாந்த்ரா போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வினய் குமார் சவுடி என்ற பெயரில் இவரை தொடர்புகொண்ட நபர், ராஜ் குண்ட்ரா என்ற மோசடி நபர், உங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி மும்பையில் வங்கி கணக்கு துவங்கி, பண மோசடி செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மறுநாள் ஆகாஷ் குல்கரி என்பவர், போலீஸ் உயர் அதிகாரி, ஜார்ஜை கைது செய்யப்போவதாகவும், அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள அபராத தொகையாக, வங்கிக்கணக்கில் இருக்கும் தொகையை தனக்கு அனுப்பிவைக்குமாறும் கூறியுள்ளார்.
பயந்துபோன ஜார்ஜ், தனது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.67 லட்சத்தை அந்நபருக்கு அனுப்பியுள்ளார்.
மீண்டும் பணம் கேட்டு மிரட்டல் வர, நிரந்தர வைப்பு தொகையான ரூ.10 லட்சத்தை நேரில் சென்று அனுப்ப வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது பணத்துக்கான தேவை குறித்து கேட்டறிந்த வங்கி மேலாளர், சைபர் கிரைம் போலீசில், புகார் அளிக்குமாறு உஷார்படுத்தியுள்ளார்.
கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஜார்ஜ் புகார் அளித்ததன் அடிப்படையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரவிக்குமார் சர்மா,23, முகுல் சந்தல்,24, அணில் ஜடாவ்,24 ஆகியோரை தனிப்படை போலீசார் கடந்த மாதம் கைது செய்து, அழைத்து வந்தனர்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் மூவரும், தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.