/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் சதுர்த்தி விழா; போலீஸ் கொடி அணிவகுப்பு
/
விநாயகர் சதுர்த்தி விழா; போலீஸ் கொடி அணிவகுப்பு
ADDED : செப் 07, 2024 02:54 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, போலீசாரின் கொடி அணி வகுப்பு நடந்தது.
பொள்ளாச்சியில், விநாயகர் சதுர்த்தி விழா இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்து முன்னணி - 109, விஷ்வ ஹிந்து பரிஷத் - 5, இந்து மக்கள் கட்சி - 3, ஹிந்து மக்கள் கட்சி ஹனுமன் - 1, உலக நல வேள்விக்குழு - 1, பொதுமக்கள் - 108, என, மொத்தம், 227 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. வால்பாறை சரகத்தில், 266 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
இதையடுத்து, சிலை பிரதிஷ்டை, விசர்ஜனத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், போலீசாரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. ஏ.டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி தலைமையில், டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பங்கேற்ற அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.
காந்தி சிலை அருகே துவங்கிய அணிவகுப்பு, உடுமலை ரோடு அரசு மருத்துவமனை, கடைவீதி வழியாக சென்று, வெங்கட்ராமணன் பள்ளி வீதி, பஸ் ஸ்டாண்ட், பாலக்காடு ரோடு வழியாக சென்று, போலீஸ் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.
இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில், ஐந்து இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., மற்றும் எஸ்.எஸ்.ஐ.,க்கள் - 27, ஊர்காவல்படை, ஆயுதப்படை போலீசார், பேரிடர் மீட்பு போலீசார் என, 285 போலீசார் பங்கேற்றனர்.
டி.எஸ்.பி., கூறியதாவது:
பொள்ளாச்சியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இரண்டு கூடுதல் எஸ்.பி., நான்கு டி.எஸ்.பி.,க்கள், போலீசார் என மொத்தம், 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும், சமரச கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. பதட்டமான பகுதியான செம்பாகவுண்டர் காலனி பகுதியில் கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிலைகள் வைக்க கூடிய இடங்களில் பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விசர்ஜன ஊர்வலத்தின் போது, கோஷங்கள் எழுப்பக்கூடாது. விதிமுறைகள் பின்பற்ற வேண்டுமென்றும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தலாம் என சிலை வைக்கும் ஒருங்கிணைப்பாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிலை கரைக்க கூடிய பகுதியான அம்பராம்பாளையம், கெடிமேடு பகுதியில் உள்ளாட்சி அமைப்புகள் தெருவிளக்கு வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
சிலை பிரதிஷ்டை செய்த பின், இன்றே, 15 சிலைகள் கரைக்கப்படுகின்றன. நாளை (8ம் தேதி), 16 சிலைகளும், 9ம் தேதி 123 சிலைகள், வரும், 10ம் தேதி, 72 சிலைகள், 11ம் தேதி ஒரு சிலை, என, மொத்தம், 227 சிலைகள் கரைக்கப்பட உள்ளன.
இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமைதியான முறையில் விழா நடத்த கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.