/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடுகளை திருடி 'கசாப்' போட்டு கறிக்கடையில் விற்ற கும்பல் கைது
/
ஆடுகளை திருடி 'கசாப்' போட்டு கறிக்கடையில் விற்ற கும்பல் கைது
ஆடுகளை திருடி 'கசாப்' போட்டு கறிக்கடையில் விற்ற கும்பல் கைது
ஆடுகளை திருடி 'கசாப்' போட்டு கறிக்கடையில் விற்ற கும்பல் கைது
ADDED : ஜூலை 28, 2024 01:00 AM

வடவள்ளி:கோவையில், பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆடு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வடவள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து ஆடு திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்த மாதம் மட்டும், 10க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போனது. ஆடுகளை பறிகொடுத்தவர்கள், வடவள்ளி போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து, நமது நாளிதழில் இரு தினங்களுக்கு முன் 'ஆடு பத்திரம்' என்ற தலைப்பில் செய்தி வெளியானது.
வடவள்ளி இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் தலைமையிலான தனிப்படை போலீசார், வழக்கு பதிவு செய்து, ஆடு திருட்டு கும்பலை தேடி வந்தனர்.
அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஆம்னி வேன் மற்றும் இருசக்கர வாகனத்தில், ஆடுகளை திருடி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து, ஆடு திருட்டில் ஈடுபட்ட மத்வராயபுரத்தை சேர்ந்த சண்முகம், அவரது மனைவி சுகன்யா, மகன் வினோத்குமார், குனியமுத்தூரை சேர்ந்த சாதிக் பாஷா, சுந்தராபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோரை, வடவள்ளி போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், வடவள்ளி மட்டுமின்றி, சுந்தராபுரம், போத்தனூர், சாய்பாபா காலனி, குனியமுத்தூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆடுகளை திருடியது தெரிய வந்தது.
அவ்வாறு திருடும் ஆடுகளை, தங்கள் வைத்திருந்த இறைச்சிக்கடையில் வெட்டி, விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து, 51 ஆடுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆடு திருட்டு கும்பலை சேர்ந்த, 5 பேரையும் போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.