/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பிறருக்காக வாழ்பவர்களே மாமனிதர்கள்'
/
'பிறருக்காக வாழ்பவர்களே மாமனிதர்கள்'
ADDED : ஏப் 26, 2024 11:24 PM
கோவில்பாளையம்;'பிறருக்காக வாழ்பவர்களே மாமனிதர்கள்,' என தமிழ்ச்சங்க விழாவில், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., பேசினார்.
கவையன்புத்தூர், தமிழ்ச் சங்கம் சார்பில், கோவில்பாளையம் இன்போ பொறியியல் கல்லூரியில் இலக்கிய நிகழ்வு நடந்தது. சங்கத்தின் பொதுச்செயலாளர் கணேசன் வரவேற்றார்.
ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., வெள்ளிங்கிரி தலைமை வகித்து பேசுகையில், ''சமுதாயத்திற்கு சேவை செய்ய நினைக்கும் போது மனிதன் இரண்டாவது முறையாக பிறக்கிறான். யார் ஒருவர் தனக்காக வாழாது பிறர்க்காக வாழ்கிறார்களோ, அவர்களே மாமனிதர்கள். உயிரின் பரிணாம வளர்ச்சி குறித்து வேதாத்திரியம் தெளிவாகக் கூறுகிறது,'' என்றார்.
தமிழறிஞர் தர்மலிங்கம் பேசுகையில், ''வள்ளுவனை வாசிக்கும் முன், தொல்காப்பியத்தை சுவாசித்தல் சிறப்பு. வள்ளுவத்தை பின்பற்றி வாழ்ந்தால், வாழ்க்கை வளமானதாக அமையும்,'' என்றார்.
'அறிவோம் ஒரு அரிய செய்தி' என்ற தலைப்பில் பரமசிவம் பேசுகையில், ''இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மனிதன் புரிந்து கொள்ளாமல் இருக்கிறான்,'' என்றார்.
பேராசிரியர் மோகனசுந்தரம் பேசுகையில், ''வள்ளுவத்தில் சொல்லாத கருத்துக்களே இல்லை. பெண்ணின் பெருமை, இல்லாள் கடமை என அனைத்தும் கூறப்பட்டுள்ளது,'' என்றார்.
பல்வேறு தமிழ் அறிஞர்கள் குறித்து பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பேசினர். சான்றோர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

