ADDED : மார் 02, 2025 04:11 AM
தொண்டாமுத்தூர் : கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட அட்டுக்கல், கெம்பனூர் பகுதியில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, கெம்பனூர் ரோட்டில் உள்ள எஸ்.கே.பார்ம் என்ற தோட்டத்திற்குள், ஒரு சிறுத்தை புகுந்துள்ளது.
அந்த சிறுத்தை, தங்கம் என்பவர் வளர்த்து வந்த ஒரு ஆட்டை கடித்து கொன்றுவிட்டு, அங்கிருந்து ஓடி சென்றுவிட்டது. அதிகாலையில் வழக்கம் போல ஆட்டை பார்க்க தங்கம் சென்றபோது, சிறுத்தை கடித்து ஆடு உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் அங்கிருந்த கால் தடங்கள் மற்றும் சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.
இப்பகுதியில் நடமாடும், சிறுத்தையை பிடிக்க, இன்று கூண்டு வைக்கப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர். இப்பகுதியில், ஏற்கனவே கடந்தாண்டு, இதுபோல தோட்டங்களில் உள்ள நாய், ஆடுகளை சிறுத்தை தொடர்ந்து கொன்று வந்தது. ஆனால், இறுதி வரை, வனத்துறையினரின் கூண்டில் சிக்காமல், சிறுத்தை போக்கு காட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.